1,800 ஆசிரியர்களுக்கு பயிற்சி- மாணவர்களுக்கு வரப்பிரசாதமாக அமைந்த எண்ணும் எழுத்தும் திட்டம்
- கொரோனா காலகட்டத்தில் குழந்தைளுக்கு அடிப்படை கல்வியறிவு வழங்க முடியாமல் போய்விட்டது.
- கடந்தாண்டுகளில் மூன்றாம் வகுப்பு வரை பாடப்புத்தகம் சார்ந்த கற்பித்தல் அமைந்திருந்தது.
திருப்பூர்:
கொரோனா சமயத்தில் மாணவர்களுக்கு கற்றலில் ஏற்பட்ட மிகப்பெரிய இடைவெளியை குறைக்கும் விதமாக எண்ணும் எழுத்தும் திட்டம் ஒன்று முதல் 3-ம் வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு இன்று தொடங்குகிறது.இத்திட்டத்தின் முக்கிய நோக்கம், 8வயதுக்குட்பட்ட அனைத்து குழந்தைகளும் முழுமையான எண்ணறிவையும், எழுத்தறிவையும் பெற்றிருக்க வேண்டும் என்பதே. தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கு முதல்கட்டமாக கற்றல் உபகரணங்கள் பயன்படுத்தி கற்பிப்பது குறித்து ஆசிரியர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டன.
திருப்பூர் மாவட்டத்தில் உள்ள1 முதல் 3-ம்வகுப்பு வரை கற்பிக்கும் 1,800 ஆசிரியர்களும் இதன்கீழ் பயனடைந்துள்ளனர்.
இது குறித்து எண்ணும் எழுத்தும் பயிற்சி பெற்ற 15 வேலம்பாளையம் நடுநிலைபள்ளி இடைநிலை ஆசிரியர் கோபாலகிருஷ்ணன் கூறியதாவது:-
கொரோனா காலகட்டத்தில் குழந்தைளுக்கு அடிப்படை கல்வியறிவு வழங்க முடியாமல் போய்விட்டது. எல்.கே.ஜி., யு.கே.ஜி., படிக்காமல்நேரடியாக ஒன்றாம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்கு கற்றல் இடைவெளியை ஈடுகட்ட சிறப்பு கற்பித்தல் முறையை கல்வித்துறை கொண்டு வந்துள்ளது.தற்போது முதல் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர் 2025ல் 3-ம்வகுப்பு முடிக்கையில், அடிப்படை எண்ணறிவு, எழுத்தறிவு பெற்றிருக்க வேண்டும். தமிழ், ஆங்கிலத்தை பிழையின்றி வாசிக்கவும், எழுதவும் தெரிந்திருக்க வேண்டும்.
கணிதத்தின் அடிப்படை அறிவை பெற்றிருக்க வேண்டும் என்பதே இதன் சாரம்சம்.இதற்காக சிறப்பு ஆசிரியர் கையேடு மாணவர்களுக்கு பாடப்புத்தகத்துடன் பிரத்யேக பயிற்சி புத்தகமும் வழங்கப்படுகிறது. ஒன்றாம் வகுப்பு, அரும்பு நிலை இரண்டாம் வகுப்பு மொட்டு நிலை', மூன்றாம் வகுப்பு, மலர் நிலை என மூன்று நிலைகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்தாண்டுகளில் மூன்றாம் வகுப்பு வரை பாடப்புத்தகம் சார்ந்த கற்பித்தல் அமைந்திருந்தது. இத்திட்டத்தின்படி கல்வி உபகணரங்கள், விளையாட்டு, பொம்மலாட்டம், குவிஸ், கலைப்பொருட்கள் சார்ந்த செயல்முறைகள், பயிற்சி புத்தகங்களில் கற்பித்தல் இருக்க போகிறது.பாடப்புத்தகம் அவ்வப்போது துணைக்கருவியாக மட்டுமே பயன்படுத்தப்படும். விரைவில் மதிப்பீடு செய்ய செயலி அறிமுகப்படுத்தப்படுகிறது. மாணவர்களுக்கு நிச்சயம் இத்திட்டம் ஒரு வரப்பிரசாதமே. இவ்வாறு அவர் கூறினார்.