உள்ளூர் செய்திகள்

பூந்தமல்லி அருகே ரசாயன பொருட்களை ஏற்றியபோது தீப்பிடித்த லாரிகள்

Published On 2024-07-28 07:22 GMT   |   Update On 2024-07-28 07:22 GMT
  • கேன் தவறி விழுந்ததில் கண்டெய்னர் லாரியில் தீப்பிடித்தது.
  • ரசாயனங்கள் பற்றி எரிந்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம்.

பூந்தமல்லி:

பூந்தமல்லி அடுத்த நசரத்பேட்டை பகுதியில் ஏராளமான தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இந்த தொழிற்சாலைகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்து மூலப்பொருட்கள் லாரிகள் மட்டும் லாரிகளில் கொண்டு வரப்படுவது வழக்கம்.

இதே பகுதியில் செயல் பட்டு வரும் தனியார் தொழிற்சாலைக்கு நேற்று நள்ளிரவில் கண்டெய்னர் லாரியில் கேன்களில் தின்னர் என்ற ரசாயனம் கொண்டுவரப்பட்டது. பின்னர் தொழிற்சாலை அருகே கண்டெய்னர் லாரியை நிறுத்தி விட்டு அதில் இருந்து ரசாயன கேன்களை இறக்கி வேறு ஒரு லாரிக்கு தொழிலா ளர்கள் மாற்றி ஏற்றிக் கொண்டு இருந்தனர்.

அப்போது ஒரு கேன் தவறி விழுந்ததில் கண்டெய்னர் லாரியில் தீப்பிடித்தது. அங்கிருந்த தொழிலாளர்கள் தீயை அணைக்க முயன்றும் முடியவில்லை. தீ அதிக அளவில் பரவியதால் அருகில் இருந்த மற்றொரு லாரிக்கும் பரவியது. இதில் 2 லாரிகளும் தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

அந்த இடத்தின் அருகி லேயே வாகனங்கள் நிறுத்து மிடம் உள்ளது. அதில் கண்டெய்னர் லாரிகள் உள்பட 40-க்கு மேற்பட்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இதனால் அந்த வாகனங்களி லும் தீ பரவும் அபாயம் ஏற்பட்டது.

உடனடியாக அதிக அளவில் தீப்பற்றி எரிந்த லாரியை டிரைவர் சாமர்த்தியமாக வேகமாக ஓட்டி வந்து அருகில் உள்ள பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை ஒட்டிய சர்வீஸ் சாலையில் நிறுத்தினார். சிறிது நேரத் தில் அந்த லாரியில் தீ மளமள வென பற்றி எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

தகவல் அறிந்ததும் பூந்த மல்லி, அம்பத்தூர், மதுரவாயல், ஜெ.ஜெ.நகர், ஆவடி, கோயம்பேடு, இருங்காட்டுக்கோட்டை , ஆகிய தீயணைப்பு நிலையங்களில் இருந்து 7 தீயணைப்பு வாகனங்களில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்தனர். அவர்கள் தொழிற்சாலை முன்பு நிறுத்தப்பட்டு இருந்த லாரியில் பற்றிய தீயை உடனடியாக அணைத்தனர்.

ஆனால் சாலையோரம் நிறுத்தப்பட்டு இருந்த லாரியில் இருந்த ரசாயனங்கள் முழுவதும் பற்றி எரிந்ததால் தீயை அணைப்பதில் கடும் சிரமம் ஏற்பட்டது. பலமணிநேரம் போராடி தீயை அணைத்தனர். எனினும் லாரி முழுவதும் முற்றிலும் எரிந்து நாசமானது.

தீப்பற்றியதும் லாரியை டிரைவர் உடனடியாக சாலையோரம் கொண்டு வந்து நிறுத்தியதால் தொழிற்சாலையில் நிறுத்தப்பட்டு இருந்த மற்ற வாகனங்களுக்கு தீ பரவுவது தடுக்கப்பட்டது.

தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்த லாரியை சர்வீஸ் சாலைக்கு ஓட்டி வந்தபோது லாரியில் இருந்து சாலையில் கொட்டிய ரசாயனத்தால் சாலை முழுவதும் சிறிது நேரம் தீப்பிடித்து எரிந்தது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து நசரத்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News