வேலூர் பழைய பஸ்நிலையத்தில் பர்மா பஜார் கடைகளில் திடீரென தீ விபத்து
- 2 கடைகள் முற்றிலும் எரிந்து நாசம்
- தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்தனர்
வேலூர்:
வேலூர் பழைய பஸ்நிலையம் பகுதியில் பர்மா பஜார் செயல்பட்டு வருகிறது. இங்கு செல்போன், மின்னனு சாதன பொருட்கள், காலணிகள், துணிக்கடைகள் என 30-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இன்று அதிகாலை 1 மணியளவில் பர்மா பஜாரில் செயல்பட்டு வரும் ஒரு கடையில் இருந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதனைக் கண்ட பொதுமக்கள் உடனடியாக வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர்.
இருப்பினும் 2 கடைகளில் தீ பரவி முற்றிலுமாக எரிந்து நாசமானது. இதுகுறித்து வேலூர் வடக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தீ விபத்து சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பர்மா பஜாரில் உள்ள அகமதுவுல்லா என்பவரின் காலணி கடையில் இருந்து மின் இணைப்பில் பழுது ஏற்பட்டு தீ விபத்து ஏற்பட்டது.
பின்னர் தீ அருகில் இருந்து தனசேகர் என்பவரின் மின்சாதன கடைக்கு பரவியது. இதனால் 2 கடைகளும் முற்றிலும் எரிந்து நாசமானது. இதன் மதிப்பு ரூ.50 ஆயிரம் என தீயணைப்பு வீரர்கள் தெரிவித்தனர்.