கல்வி ஒன்றே மனிதனை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும்
- முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா பேச்சு
- வி.ஐ.டி.யில் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது
வேலூர்:
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் குடியரசு தினத்தையொட்டி விஐடி வேந்தர் டாக்டர் கோவிசுவநாதன் தேசிய கொடியேற்றி மரியாதை செலுத்தினார். உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி இப்ராஹிம் கலிபுல்லா சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களிடையே பேசினார்.
அதைத்தொடர்ந்து விஐடியில் குடியரசு தினத்தையொட்டி ஆண்டுதோறும் நடைபெறும் முன்னாள் மாணவர்கள் சந்திப்பு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற இப்ராஹிம் கலிபுல்லா பேசுகையில், ஊழலற்ற நேர்மையான நன்னடத்தை கொண்ட சமுதாயமாக நாம் அனைவரும் இருக்க வேண்டும்.
கல்வி ஒன்று மட்டுமே மனித இனத்தை முன்னேற்ற பாதைக்கு கொண்டு செல்லும் கருவியாக செயல்படுகிறது. கல்வியால் மட்டுமே மனிதனை அறியாமையில் இருந்து விடுவிக்க முடியும் என்றார்.
விஐடி வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதன் பேசுகையில்:- உலகில் மிகப்பெரிய நாடுகளில் ஒன்றான இந்தியாவில் அனைவருக்கும் கல்வி கிடைப்பதில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
தேசிய புதிய கல்விக் கொள்கையில் அனைவருக்கும் உயர்கல்வியில் சேரும் சதவிகிதம் தற்போது 27 ஆக உள்ளது, இதை 50 சதவிகிதமாக உயர்த்த வேண்டும்.
இதில் தமிழ்நாடு உட்பட சில மாநிலங்களில் ஏற்கனவே 27 சதவீதத்தை விட அதிகமாக உள்ளது என்றார்.
விழாவில் கவுரவ விருந்தினராக எம்பசிஸ் நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவர் (மனித வளம்) சதீஷ் ராஜரத்தினம், வி ஐ டி துணைத் தலைவர்கள் சங்கர் விசுவநாதன், ஜி.வி. செல்வம், உதவி துணைத் தலைவர் காதம்பரி ச. விசுவநாதன், துணைவேந்தர் டாக்டர். ராம்பாபு கோடாலி, இணை துணை வேந்தர் டாக்டர். பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் டாக்டர். ஜெயபாரதி, விஐடி முன்னாள் மாணவர்கள் சங்கத்தின் நிர்வாகிகள், முன்னாள் மாணவர்கள், பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.