ஆந்திரா செல்லும் கனரக வாகனங்கள் மாற்று பாதையில் செல்ல அறிவுறுத்தல்
- குடியாத்தம், விரிஞ்சிபுரம் பாலங்கள் பழுதடைந்ததால் நடவடிக்கை
- போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது
வேலூர்:
வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
பள்ளிகொண்டா பேரூராட்சி பகுதியில் அமைந்துள்ள குடியாத்தம் செல்லும் மாநில நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசல் மிக அதிகமாக உள்ளது. இதனால் ஆந்திர மாநிலத்திலிருந்து குடியாத்தம் பள்ளி கொண்டா செல்லும் கனரக சரக்கு வாகனங்கள் குடியாத்தத்திலிருந்து ஆம்பூர் வழியாக செல்ல அறிவுறுத்தப்பட்டிருந்தது.
ஆனால், வேலூர் மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை வழக்கத்தைவிட அதிக அளவு பெய்துள்ளதால் நெடுஞ்சாலை துறையால் பராமரிக்கப்படும் குடியாத்தம் நகர் பகுதி மற்றும் விரிஞ்சிபுரம் ஆகிய இடங்களில் பாலங்கள் மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
கனரக மற்றும் மிககனரக சரக்கு வாகனங்கள் பயன்படுத்தப்படுவதால் மேலும் பழுதடைவதுடன் உள்ளூர் பொதுமக்கள் மற்றும் பள்ளிச்செல்லும் குழந்தைகள் பாதிக்கப்படுகின்றனர். மேலும் சிறுசிறு விபத்துக்கள் நிகழ்கின்றன.
இவற்றை தடுக்கும் பொருட்டு ஆந்திர மாநிலம் சித்தூரிலிருந்து சென்னை மார்கமாகவும் மற்றும் கிருஷ்ணகிரி மார்கமாக செல்லும் அனைத்து கனரக மற்றும் மிககனரக வாகனங்கள் காட்பாடி மற்றும் திருவலம் வழியாக சென்று ஆறு வழிச்சா லைகளை பயன்படுத்திட அறிவுறுத்தப்படுகிறது.
இந்த மாற்று ஏற்பாட்டினை காவல்துறை, போக்குவரத்து துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகத்தினர் மூலம் உறுதிசெய்யப்படும்.
அவ்வாறு மீறிச்செல்லும் வாகனங்கள் வந்த வழியாக திருப்பி அனுப்பி வைக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.