உள்ளூர் செய்திகள்

வேலூரில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அண்ணா கலையரங்கம் அருகே மழைக்கு குடைப்பிடித்தபடி சென்ற கல்லூரி மாணவிகள்.

வேலூரில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை

Published On 2022-12-12 09:52 GMT   |   Update On 2022-12-12 09:52 GMT
  • பள்ளி கல்லூரிகளுக்கு மாணவ, மாணவிகள் நனைந்தபடி சென்றனர்
  • மாலை 3 மணிக்கு விடுமுறை அறிவிப்பு

வேலூர்:

மாண்டஸ் புயலை தொடர்ந்து ராணிப்பேட்டை வேலூர் திருவண்ணாமலை திருப்பத்தூர் மாவட்டத்தில் பலத்த மழை பெய்து வருகிறது. ராணிப்பேட்டை மாவட்டத்தில் நேற்று இரவு முதல் பரவலாக மழை பெய்து வருகிறது.

அரக்கோணம், நெமிலி, காவேரிப்பாக்கம், சோளிங்கர், வாலாஜா, ஆற்காடு ஆகிய வட்டா ரங்களில் கனமழை பெய்தது. இதனால் அரக்கோணம் மற்றும் நெமிலி தாலுகாவில் உட்பட்ட பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து கலெக்டர் உத்தரவிட்டார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் அதிக அளவில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன.இது குறித்து அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகின்றனர்.

வேலூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் பரவலாக மழை பெய்தது. காலையில் பள்ளி கல்லூரிகளுக்கு சென்ற மாணவ மாணவிகள் நனைந்தபடி சென்றனர். வேலூர் மாநகராட்சியில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மாலை 3 மணிக்கு பள்ளிகளுக்கு கலெக்டர் குமாரவேல் பாண்டியன் விடுமுறை அறிவித்தார்.

திருப்பத்தூர் மாவட்டத்தில் இன்று அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. மேலும் கடும் குளிரும் வாட்டி வதைக்கிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்துள்ளனர்.

தொடர் மழை காரணமாக பாலாற்றில் நீர்வரத்து மேலும் அதிக ரித்துள்ளது. பாலாற்றில் இருந்து வேலூர், ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஏரிகளுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டுள்ளது.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் 369 ஏரிகள் உள்ளன. இதில் நேற்று வரை 194 ஏரிகள் நிரம்பியது. ஒரே நாளில் மேலும் 10 ஏரிகள் முழு கொள்ளளவை எட்டியது. இதனால் மாவட்டத்தில் 204 ஏரிகள் நிரம்பி கோடிப் போகிறது. 56 ஏரிகள் விரைவில் நிரம்பும் தருவாயில் உள்ளது. மற்ற ஏரிகளுக்கும் நீர் வரத்து ஏற்பட்டுள்ளது.

Tags:    

Similar News