உள்ளூர் செய்திகள்

விழுப்புரத்தில் பலத்த மழை

Published On 2024-08-11 07:15 GMT   |   Update On 2024-08-11 07:15 GMT
  • ரெயில்வே தரைப்பாலம் பகுதியிலும் மழை நீர் தேங்கியுள்ளது.
  • கனமழையால் ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

விழுப்புரம்:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. விழுப்புரம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று இரவு 11 மணியளவில் தொடங்கிய மழை இரவு 2 மணி வரை வெளுத்து வாங்கியது. பின் மறுபடியும் 3 மணிக்கு பெய்ய தொடங்கிய கனமழை காலை 6 மணி வரை விடாமல் பெய்தது. இதனால், விழுப்புரம் பஸ் நிலையம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி குளம் போல் காட்சி அளிக்கிறது. இந்த தண்ணீரை நகராட்சி ஊழியர்கள் 6 ராட்சத மின் மோட்டார் மூலம் அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். விழுப்புரம், கீழ்பெரும்பாக்கம் ரெயில்வே தரைப்பாலம் பகுதியிலும் மழை நீர் தேங்கியுள்ளது. இதனால் அப்பகுதியில் வாகனங்கள் மற்றும் நடந்து செல்பவர்களுக்கு பெரும் சிரமமாக உள்ளது . அப்பகுதியிலும் ராட்சத மோட்டார் மூலம் நீரை வெளியேற்றும் பணியில் நகராட்சி ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

விழுப்புரம் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 22 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது. கோலியனூரில் 7 சென்டி மீட்டரும் வளவனூரில் 6.4 சென்டிமீட்டரும் கெடாரில் 9 சென்டிமீட்டரும், முண்டியம்பாக்கத்தில் 4.6 சென்டிமீட்டர் நேமூரில் 3.6 சென்டி மீட்டரும், கஞ்சனூரில் 3.8 சென்டி மீட்டரும் சூரப்பட்டு 8.5 சென்டிமீட்டரு ம்வானூரில் 5.1 சென்டிமீட்டரும் திண்டிவனத்தில் 12.7சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

கடலோரப் பகுதியான மரக்காணத்தில் 10.8 சென்டிமீட்டரும், மலைப்பகுதியான செஞ்சியில் 14.2 சென்டிமீட்டர் மழையும் வளத்தியில் 7.2 சென்டிமீட்டர் திருக்கோவிலூர் அருகே உள்ள மணபூண்டியில் 2.8 சென்டிமீட்டரும், முகையூரில் 10.5 சென்டிமீட்டர் மழையும் திருவெண்ணைநல்லூரில் 3.சென்டிமீட்டர் மழையும் அரசூரில் 1.6.சென்டிமீட்டர் குறைந்தபட்சம் மழையாக பெய்துள்ளது . மாவட்டத்தில் சராசரியாக 7.6 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

விழுப்புரத்தில் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கலெக்டர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விழுப்புரம் , பெரும்பாக்கம், காணை, மாம்பழப்பட்டு, கருங்காளிப்பட்டு, சாலையகரம், கண்டமங்கலம், வழுதாவூர் அரசூர், பொய்கை அரசூர், நன்னாடு, அய்யூர்அகரம், முண்டியம்பாக்கம், கொசப்பாளையம், ஓரத்தூர் ஆகிய இடங்களிலும் இரவு முழுவதும் பெய்த கனமழையால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

மரக்காணம் அருகே கந்தாடு, காணிமேடு, மந்தகப்பட்டு, வெள்ளக்கொண்டாபுரம் பகுதிகளில் கடந்த 3 நாட்கள் பெய்த கனமழையால் மழைநீர் தேங்கியுள்ளது. நேற்று இரவு பெய்த கனமழையால் ஓங்கூர் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், அப்பகுதிகளில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். மேலும் அனுமந்தை, ஆலத்தூர், பிரம்மதேசம், எண்டியூர், கீழ்புத்துப்பட்டு சுற்றியுள்ள 60 கிராமங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. மின் இணைப்பு துண்டிப்பால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மரக்காணம் உப்பளம் சுமார் 3500 ஏக்கர் உள்ளது தொடர்ந்து பெய்த மழையால் உப்பளம் தண்ணீரில் மூழ்கியுள்ளது. இதனால், இங்கு 3500 ஊழியர்கள் வேலைக்கு செல்ல இயலாத நிலை ஏற்பட்டுள்லது. மேலும் மரக்காணம் பகுதிகளில் 11 மின்கம்பங்கள் சரிந்துள்ளது. இதனால், பொதுமக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனர். இதே போல் வாழை மரங்கள், மாமரம், தென்னை மரங்கள், மரவள்ளி கிழங்கு மற்றும் நெற்பயிர் போன்ற தாவரங்கள் மழையில் பாதிப்படைந்துள்ளது.

Tags:    

Similar News