கோவையில் 8 கல்குவாரிகளில் விதி மீறல்
- மீதமுள்ள குவாரிகளில் விதிமீறல் கண்டறிய சர்வே எடுத்து அபராதம் விதிக்கப்படும்.
- இதுவரை 66 குவாரி குத்தகைதாரர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
கோவை,
கோவையில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கடத்தப்பட்டு வருகின்றன. இதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசியல் கட்சியினரும், விவசாய சங்கத்தினரும் வலியுறுத்தி வருகிறார்கள்.
இதைத்தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள கல்குவாரிகளில் அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதில் 8 குவாரிகளில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
கோவை மாவட்டத்தில் 12 குவாரிகளில் நில அளவீடு செய்ததில் 8 குவாரிகளில் விதிமீறல் கண்டறியப்பட்டு அபராதம் விதிக்க பரிந்துரைக்கப்படுகிறது.
மீதமுள்ள குவாரிகளில் விதிமீறல் கண்டறிய சர்வே எடுத்து அபராதம் விதிக்கப்படும். குவாரி குத்தகைதாரர்கள் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தால் நில அளவீடு செய்து எல்லை தூண்கள் நட அறிவுறுத்தப்பட்டது. இதுவரை 66 குவாரி குத்தகைதாரர்கள் ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளனர்.
மேலும், கடந்த 2 மாதங்களில் உரிய அனுமதியின்றி கனிமங்கள் கொண்டுசென்றதற்காக சிறப்பு பறக்கும் படையின் மூலம் 15 வாகனங்கள் மற்றும் கனிம வளத்துறையினர் மூலம் 3 வாகனங்கள் கைப்பற்றப்பட்டும், அதிக பாரம் ஏற்றி சென்றதற்காக வட்டார போக்குவரத்து அலுவலர்களால் 21 வாகனங்கள் கைப்பற்றப்பட்டும் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.