மது போதையில் இருந்த ராணுவ வீரரிடம் நகை திருடிய தொழிலாளி தற்கொலை
- மது போதையில் இருந்த ராணுவ வீரரிடம் நகை திருடிய தொழிலாளி தற்கொலை செய்து கொண்டார்.
- ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விருதுநகர்
மதுரை மாவட்டம் தொப்பம்பட்டியை சேர்ந்தவர் ரமேஷ் பாண்டி (வயது28). இவர் மேகலாயாவில் ராணுவ வீரராக பணியாற்றி வருகிறார். இவர் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்தார். பின்னர் திருவண்ணாமலையில் உள்ள தனது மாமனார் வீட்டிற்கு சென்றார்.
இந்த நிலையில் ஒரு திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக விருதுநகர் மாவட்டம் மடவிளாகத்திற்கு கடந்த 7-ந் தேதி வந்தார். அப்போது அங்குள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு சென்று மது குடித்தார். அப்போது தன்னியாபுரம் பகுதியை சேர்ந்த மணிஅச்சன் (43) என்பவரும் மது குடித்துள்ளார்.
அப்போது இருவரும் பேசிக் கொண்டிருந்தனர். இதற்கிடையே ரமேஷ் பாண்டி அளவுக்கு அதிகமாக மது குடித்துள்ளார். இதனால் அவர் வீட்டிற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. உடனே அவர் திருவண்ணாமலையில் உள்ள தனது மாமனாருக்கு போன் செய்து தன்னை அழைத்து செல்லும்படி கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து அவரது மாமனார் சம்பவ இடத்திற்கு வந்து ரமேஷ் பாண்டியை திருவண்ணாமலைக்கு அழைத்து சென்றார். ரமேஷ் பாண்டி போதை தெளிந்த தும் அவர் அணிந்திருந்த 1 ½ பவுன் கை செயின், 1 பவுன் மோதிரம் திருட்டு போயிருந்தது தெரியவந்தது.
இதுபற்றி அவர் கடந்த 9-ந் தேதி ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசில் புகார் செய்தார். அதில் தனது நண்பர் மணிஅச்சன் நகையை திருடி இருக்கலாம் என்று சந்தேகப்படுவதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் நேற்று போலீசார் மணி அச்சனை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர்.
அப்போது அவர் ரமேஷ் பாண்டியிடம் இருந்து கைசெயினை மட்டும் திருடியதாக கூறினார். இருந்த போதிலும் மோதிரத்தையும் அவர் தான் திருடியிருக்க வேண்டும் என்று ரமேஷ் பாண்டி கூறியதால் அவரை போலீசார் எச்சரித்து வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வீட்டிற்கு சென்ற மணிஅச்சன் இரவு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூர் டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.