உரங்களுடன் இணை பொருட்கள் வாங்க வற்புறுத்தினால் நடவடிக்கை
- உரங்களுடன் இணை பொருட்கள் வாங்க வற்புறுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என விருதுநகர் கலெக்டர் எச்சரித்துள்ளார்.
- கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
விருதுநகர்
விருதுநகர் மாவட்ட கலெக்டர் மேகநாதரெட்டி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
விருதுநகர் மாவட்டத்தில் யூரியா 1991 மெட்ரிக் டன், டி.ஏ.பி. 841 மெட்ரிக் டன், பொட்டாஷ் 574 மெட்ரிக் டன், காம்ப்ளக்ஸ் 2,028 மெட்ரிக் டன் தனியார் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் இருப்பு வைக்கப்பட்டு, தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
உரங்கள் அரசு நிர்ணயம் செய்த விலையிலேயே தற்போது விற்பனை செய்யப்பட்டு வருகிறது. உரங்கள் கூடுதல் விலைக்கு விற்றால் உரக்கட்டுப்பாட்டு சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மானிய விலையில் பிஓஎஸ் எந்திரங்கள் மூலமாக பயிர் சாகுபடிக்கு தேவையான உரங்களை விவசாயிகளின் ஆதார் எண்ணை பதிவு செய்து விற்க வேண்டும். உரங்களின் இருப்பு மற்றும் விலை விபரங்களை தகவல் பலகையில் எழுதி வைக்க வேண்டும். விவசாயிகள் உரங்கள் வாங்கும் போது உரிய ரசீது பெற வேண்டும்.
மேலும் இருப்பு விபரங்கள் தனியார் உர விற்பனை நிலையங்கள் மற்றும் கூட்டுறவு உர விற்பனை நிலையங்களில் சரியாக பராமரிக்கப்பட வேண்டும். உரங்களுடன் நேனோ யூரியா போன்ற இணை பொருட்களை விவசாயி களுக்கு கட்டாயப்படுத்தி வழங்கக்கூடாது.
உரிய ஆவணமின்றி உர விற்பனையில் ஈடுபடக்கூடாது. இதனை கடைபிடிக்க தவறும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.