குறைந்தபட்ச ஆதார விலைக்கு கொப்பரை தேங்காய் முழுவதையும் கொள்முதல் செய்ய வேண்டும்-மாவட்ட கலெக்டரிடம் பொள்ளாச்சி ஜெயராமன் எம்.எல்.ஏ. மனு
- கொப்பரை தேங்காயை இருப்பு வைப்பதற்கு குடோன்கள் ஏற்படுத்த வேண்டும்.
- ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணையை வழங்க ஆவணம் செய்ய வேண்டும்.
கோவை,
அ.தி.மு.க. தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி.வேலுமணி எம்.எல்.ஏ., தலைமையில் தேர்தல் பிரிவு செயலாளரும், பொள்ளாச்சி தொகுதி எம்.எல்.ஏ.,வுமான பொள்ளாச்சி ஜெயராமன் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியை சந்தித்து மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
தமிழக அரசு குறைந்தபட்ச ஆதார விலைக்கு கரும்பு, நெல் முழுமையாக கொள்முதல் செய்வது போல தென்னை விவசாயிகள் உற்பத்தி செய்யும் கொப்பரை தேங்காயையும் முழுவதும் கொள்முதல் செய்ய வேண்டும்.
ஒரு ஏக்கருக்கு 1164 கிலோவாக மாற்றி கொள்முதல் செய்ய வேண்டும். கொள்முதல் நிலையங்களுக்கு தேவையான சாக்குகள் கிடைக்காமல் இருப்பதை சரி செய்ய வேண்டும். கொப்பரை தேங்காயை இருப்பு வைப்பதற்கு குடோன்கள் ஏற்படுத்த வேண்டும்.
கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரைகளை காலியாக உள்ள ஒழுங்குமுறை விற்பனை கூடங்களான பெதப்பம்பட்டி, அவினாசி, சேவூர், வடக்கிப்பாளையம் ஆகிய கிடங்கில் வைக்க வழிவகை செய்து கொள்முதலை துரிதப்படுத்த வேண்டும்.
கடந்த ஆண்டு கொள்முதல் செய்யப்பட்ட கொப்பரை தேங்காய் முழுவதையும் எண்ணையாக மாற்றி ரேசன் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணையை வழங்க ஆவணம் செய்ய வேண்டும்.
பொள்ளாச்சி சுற்று வட்டார கிராமங்கள் அனைத்திற்கும் போதுமான குடிநீர் விநியோகம் செய்வதற்கு ரூ.71 கோடி நிதி ஒதுக்கப்பட்டு அம்பராம்பாளையம் கூட்டுகுடிநீர் திட்டம் மறுசீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
பணிகள் முடிந்த பின்னரும் கிராமங்களுக்கு மோசமான குடிநீர் செல்கிறது. எனவே குடிநீர் விநியோகத்தை சரி செய்ய வேண்டும்.
பொள்ளாச்சி தொகுதிக்குட்பட்ட அரசு டாஸ்மாக் பார்களில் 24 மணி நேரமும் மதுபானங்கள் விற்கப்படுகிறது. எனவே டாஸ்மாக் பார்களில் நடைபெறும் சில்லிங் விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அவர் அளித்த மனுவில் கூறியிருந்தார்.