உள்ளூர் செய்திகள்

ஏரியில் நீந்தி சென்ற காட்டு யானைகளை படத்தில் காணலாம்.

ஏரியில் ஆகாய தாமரைகள் இடையே நீந்தி சென்ற காட்டு யானைகள்

Published On 2023-02-08 10:06 GMT   |   Update On 2023-02-08 10:06 GMT
  • காட்டு யானைகளை ஓசூர் வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர் தொடர்ந்து இரண்டு நாட்களாக கண்காணித்து வந்தனர்.
  • ஆகாயத்தாமரை செடிகள் உள்ளிட்ட அடர்ந்த செடி கொடிகள் இருப்பதால் தண்ணீரில் நீந்த முடியாமல் 3 யானைகளும் தத்தளித்தது.

ஓசூர்,

கர்நாடக மாநிலத்தில் ஒகேனக்கல் பகுதியில் இருந்து வெளியேறிய 5 காட்டு யானைகள் தமிழக கிராம பகுதிகள் வழியாக இடம் பெயர்ந்து ஓசூர் அருகே உள்ள மத்திகிரி கால்நடை பண்ணைக்குள் புகுந்தது.

இந்த காட்டு யானைகளை ஓசூர் வனச்சரகர் ரவி தலைமையிலான வனத்துறையினர் தொடர்ந்து இரண்டு நாட்களாக கண்காணித்து வந்தனர்.

மூங்கில் காடுகளை கொண்ட அடர்ந்த கால்நடை பண்ணைக்குள் தஞ்சமடைந்த இந்த காட்டு யானைகளை மீண்டும் கர்நாடக வனப்பகுதிக்கு விரட்டும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டனர். ஆனால் காட்டு யானைகளை வேறு பகுதிக்கு விரட்ட முடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

இந்த நிலையில் இன்று அதிகாலை கால்நடை பண்ணையில் இருந்து வெளியேறிய 3 காட்டு யானைகளும் கர்னூர் பெரிய ஏரியில் நுழைந்துள்ளது.

இந்த ஏரியில் அதிக அளவில் ஆகாயத்தாமரை செடிகள் உள்ளிட்ட அடர்ந்த செடி கொடிகள் இருப்பதால் தண்ணீரில் நீந்த முடியாமல் 3 யானைகளும் தத்தளித்தது. ஆனாலும் தொடர்ந்து மறுகரைக்குச் செல்ல நீந்தி வருகிறது. பல மணி நேரமாக காட்டு யானைகள் நீந்தி வருகிறது.

இந்த காட்டு யானைகள் ஏரி நீரில் நீந்தி மறுகரையில் உள்ள கால்நடை பண்ணைக்குள் செல்லும், இதனை வனத்துறையினர் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.

கால்நடை பண்ணைக்குள் செல்லும் காட்டு யானைகளை வனத்துறையினர் இன்று மாலை கர்நாடக மாநில வனப்பகுதிக்கு விரட்ட திட்டமிட்டுள்ளனர்.

Tags:    

Similar News