உள்ளூர் செய்திகள் (District)

பாளையங்கால்வாயில் குப்பை கழிவுகள், மதுபாட்டில்கள் வீசப்பட்டும், அமலைச்செடிகளால் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதையும் படத்தில் காணலாம்.

பாளையங்கால்வாயில் ஆக்கிரமிப்புகள் தடுக்கப்படுமா?

Published On 2023-07-26 09:03 GMT   |   Update On 2023-07-26 09:03 GMT
  • நெல்லை மாவட்டத்தில் விவசாயத்திற்கு முக்கியமான கால்வாயாக பாளையங்கால்வாய் இருக்கிறது.
  • பாளையங்கால்வாய் மூலம் 57 கிராம குளங்களுக்கு தண்ணீர் சென்றடைவது வழக்கம்.

நெல்லை:

நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரானது சுமார் 126 கிலோமீட்டர் தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.

இந்த அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய் உள்ளிட்ட 7 கால்வாய்கள் மூலம் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை பாசன வசதி பெற செய்கிறது. இது தவிர தூத்துக்குடி மாவட்டத்திலும் சுமார் 46 ஆயிரம் ஏக்கர் வரை பாபநாசம் அணை தண்ணீரை நம்பி விவசாயம் நடந்து வருகிறது.

இதில் நெல்லை மாவட்டத்தில் விவசாயத்திற்கு முக்கியமான கால்வாயாக பாளையங்கால்வாய் இருக்கிறது. தாமிரபரணி ஆற்றில், பழவூர் தடுப்பணையில் இருந்து தொடங்கும் இந்த கால்வாய் சுமார் 43 கிலோமீட்டர் தூரம் கொண்டது. இக்கால்வாய் மூலம் 57 கிராம குளங்களுக்கு தண்ணீர் சென்றடைவது வழக்கம்.

இந்த தண்ணீர் மூலம் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இந்த கால்வாயில் மட்டும் 162 மடைகள் இருக்கின்றன. ஆனால், இவற்றில் பலவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன. ஷட்டர்கள் எங்குமில்லை. இதனால், தண்ணீர் வீணாவதோடு விவசாயிகளும் தங்களது பாசனப்பரப்பை ஆண்டுதோறும் குறைத்து வருகின்றனர்.

கால்வாயின் தொடக்கம் முதல் கடைசி வரையில் ஆகாயத்தாமரை, அமலை செடிகள், கால்வாய் முழுக்க ஆக்கிரமித்து இருப்பதால் கால்வாயில் நீரோட்டம் தடைபட்டு, கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேருவதில்லை. குறிப்பாக 56-வது குளமான நொச்சிக்குளம், 57-வது குளமான சாணான்குளம் ஆகியவற்றுக்கு, தண்ணீர் சேரவில்லை.

இதனால் கடந்த 15 ஆண்டுகளாக பாளையங் கால்வாயின் கடைமடை பகுதியில் கார் பருவ சாகுபடி நடக்கவே இல்லை என்ற விஷயம் வேதனைக்குரியது. இந்த கால்வாய் மாநகர பகுதியில் மட்டும் சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் பயணிக்கிறது. இந்த பகுதியில் மாநகராட்சி கழிவுகளும், சாக்கடையும், குடிமகன்களால் வீசப்படும் மது பாட்டில்களும் அடைத்து தண்ணீர் சீராக வழிந்தோட முடியாமல் போய்விடுகிறது.

குறிப்பாக, மேலப்பாளையம் குறிச்சி பகுதியில் மாநகராட்சி ஊழியர்களே, கால்வாயில் கழிவுகளை கொட்டி விடுகின்றனர் எனவும், பெரும்பாலானோர் கட்டிடக்கழிவுகளை கொட்டி பாளையங்கால்வாயில் அகலத்தை சுருக்கி விட்டார்கள் எனவும் சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர்.

தொடர் புகார்களால் பொதுப்பணி துறை, வருவாய்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து தாமிரபரணி ஆற்றிலும், பாளையங்கால்வாயிலும் சாக்கடை கலப்பதை தடுக்க மாநகராட்சி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினர். அதன் பேரில் மாநகராட்சி சில நடவடிக்கை களை மேற்கொண்டு வருகிறது.

இந்த நடவடிக்கைகளை விரைவு படுத்தி கால்வாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் என அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Tags:    

Similar News