சிங்காநல்லூர் அருகே இ.எஸ்.ஐ ஆஸ்பத்திரி முன்பு வைக்கப்பட்ட கழிப்பிடம் பயன்பாட்டிற்கு வருமா? பொதுமக்கள் எதிர்பார்ப்பு
- கோவை மாநகராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு, இந்த மருத்துவமனை முன்பாக சிறுநீர் கழிப்பிடம் ஒன்று வைக்கப்பட்டது.
- தினமும் இங்கு சென்று பூட்டிய கதவை பார்த்து ஏமாந்து திரும்பி செல்லும் சூழ்நிலை தான் ஏற்படுகிறது.
குனியமுத்தூர்,
கோவை சிங்காநல்லூர் காமராஜர் ரோட்டில் இ.எஸ்.ஐ மருத்துவமனை உள்ளது.
தினமும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் இங்கு வந்து செல்வது வழக்கம். அதுமட்டுமின்றி அவ்விடத்தில் பஸ் நிறுத்தம் உள்ளதால் ஆயிரக்கணக்கான பயணிகளும் இங்கு நின்று பஸ் ஏறி செல்வது வழக்கம். இந்நிலையில் கோவை மாநகராட்சி சார்பில் சில மாதங்களுக்கு முன்பு, இந்த மருத்துவமனை முன்பாக சிறுநீர் கழிப்பிடம் ஒன்று வைக்கப்பட்டது.
ஆனால் இன்றைய நாள் வரை அது பயன்பாட்டில் இல்லாமல் வெறுமனே நின்று கொண்டு காட்சியளிக்கிறது. இதனால் இ.எஸ்.ஐ. மருத்துவமனைக்கு வருபவர்களும், பஸ் ஏற வருபவர்களும் அவசரத்துக்கு இதனை உபயோகப்படுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது:-
இப்பகுதியில் நீண்ட நாட்களாக சிறுநீர் கழிப்பதற்கு பொது கழிப்பிடம் இல்லாமல் இருந்தது. கோவை மாநகராட்சியின் முயற்சியின் மூலம் இப்பகுதியில் இந்த சிறுநீர் கழிப்பிடம் அமைக்கப்பட்டது. ஆனால் இதுவரை இந்த கழிப்பிடம் பூட்டியே வைக்கப்பட்டுள்ளது.
தினமும் இங்கு சென்று பூட்டிய கதவை பார்த்து ஏமாந்து திரும்பி செல்லும் சூழ்நிலை தான் ஏற்படுகிறது. எனவே கோவை மாநகராட்சி உடனே தலையிட்டு இதனை திறக்க வேண்டும். இதேபோன்று மாநகராட்சி பகுதி முழுவதும் வைக்கப்பட்டு, உபயோகமில்லாமல் இருக்கும் இந்த சிறுநீர் கழிப்பிடங்களையும் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.