உள்ளூர் செய்திகள் (District)

மார்பக புற்றுநோய் குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு அவசியம்-கலெக்டர் அருணா பேச்சு

Published On 2023-11-02 09:02 GMT   |   Update On 2023-11-02 09:02 GMT
  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் குறித்து விவாதிக்கப்பட்டது.
  • 35 தூய்மை காவலா்களுக்கு பரிசுகளை வழங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார்.

ஊட்டி,

ஊட்டி ஊராட்சி ஒன்றியம், மேல்குந்தா ஊராட்சிக்குட்பட்ட கூா்மயாபுரம் சமுதாய கூடத்தில் உள்ளாட்சிகள் தினத்தையொட்டி கிராமசபை கூட்டம் நடை பெற்றது. மாவட்ட கலெக்டர் அருணா சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றாா்.

கிராமசபை கூட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலா்ச்சி திட்டம், ஜல் ஜீவன் இயக்கம், மகளிா் சுயஉதவிக்குழு உருவாக்குதல், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின்கீழ் நடைபெற்று வரும் பணிகளின் முன்னேற்றம் ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. தொடர்ந்து கலெக்டர் அருணா கூட்டத்தில் பேசியதாவது:-

பொதுமக்களின் அடிப்படை அத்தியாவசிய தேவைகள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் மூலம் களஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும். பெண்களுக்கு மாா்பக புற்றுநோய் குறித்து விழிப்புணா்வு அவசியம் இருக்க வேண்டும். அதற்காக சுகாதாரதுறை மூலம் மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த முகாம்களில் பெண்கள் தயக்கமின்றி பங்கேற்று பரிசோதனை செய்துகொள்ள முன்வர வேண்டும்.

மேல்குந்தா கிராம ஊராட்சியில் பல்வேறு திட்டப் பணிகள் நிறைவு பெற்று உள்ளன. இவை அனைத்தும் விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

முன்னதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை சாா்பில் மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தின்கீழ் 10 பேருக்கு தலா ரூ.1000 மதிப்பில் மருத்துவ பெட்டகம், 5 பேருக்கு தலா ரூ.2000 மதிப்பில் ஊட்டச்சத்து பொருள்கள் அடங்கிய பெட்டகம் ஆகியவை வழங்கப்பட்டன.

தொடர்ந்து 35 தூய்மை காவலா்களுக்கு பரிசுகளை வழங்கிய மாவட்ட கலெக்டர் பொதுமக்களிடம் இருந்தும் பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றார். இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

கிராமசபை கூட்டத்தில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமா மகேஸ்வரி, ஊட்டி ஊராட்சி ஒன்றிய தலைவா் மாயன் (எ) மாதன், தோட்டக்கலை இணைஇயக்குநா் ஷிபிலாமேரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் வாஞ்சி நாதன், ஊட்டி கோட்டாட்சியா் மகராஜ், சுகாதார பணிகள் துணை இயக்குநா் பாலுசாமி உள்பட பலா் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News