100 நாள் வேலை திட்ட கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தல்
- 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தீர்மானம்
- மாவட்ட செயலாளர் சந்திரசேகர் வேலை அறிக்கை மற்றும் செலவு அறிக்கை வாசித்தார்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நாராயணசாமி, குமார், மாவட்ட துணைத்.தலைவர் சரவணன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட துணைத்தலைவர் மோகன்குமார் வரவேற்றார். கூட்டத்தில் கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மற்றும் அலுவலக உதவியாளர், கணக்கர், சாலை ஆய்வாளர்கள் ஆகிய புதிய பணியிடங்கள் தோற்றுவிக்க வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்கள் மற்றும் வட்டார முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பணி நிரந்ரம் செய்ய வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
முன்னதாக மாவட்ட செயலாளர் சந்திரசேகர் வேலை அறிக்கை மற்றும் செலவு அறிக்கை வாசித்தார். இதில் மாவட்ட இணை செயலாளர்கள் வீரபத்திரன், ஜெகதீசன், மாவட்ட தணிக்கையாளர் மனோகர் உள்ளிட்ட 9- வட்டாரங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார இணை செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.