ஏற்காடு கோடைவிழாவில் சுற்றுலா பயணிகள், அரசு ஊழியர்களுக்கு விளையாட்டு போட்டிகள்
- ஏற்காட்டில் 46-வது கோடைவிழா - மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது.
- ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
ஏற்காடு:
சேலம் மாவட்டம் ஏற்காட்டில் 46-வது கோடைவிழா - மலர் கண்காட்சி நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. இதனை காண ஏராளமான சுற்றுலா பயணிகள் ஏற்காட்டில் குவிந்த வண்ணம் உள்ளனர்.
அண்ணா பூங்காவில் நடந்த மலர் கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ள வண்ண மயமான மலர்களையும், மலர்கள், காய்கறிகள் பழங்க ளால் உருவாக்கப்பட்ட காந்தி கண்ணாடி, எறும்பின் உருவம், மேட்டூர் அணை, முயல் உருவம், புலி, செல்பி பாயின்ட் உள்ளிட்டவற்றை கண்டு ரசித்து, செல்பி எடுத்து மகிழ்ந்தனர். இதில் மலர்களால் ஆன சின்சான் பொம்மை குழந்தைகள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.
இதேபோல், படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள், அங்கு குடும்பத்துடன் படகு சவாரி செய்து மகிழ்ந்தனர். மேலும் ஏரி பூங்கா, மான் பூங்கா, லேடீஸ் சீட், ஜென்ட்ஸ் சீட், பக்கோடா பாயிண்ட் உள்ளிட்ட இடங்களில் குடும்பத்துடன் பொழுதை கழித்தனர்.
இவ்விழாவை முன்னிட்டு வரும் 28-ந் தேதி வரை நாள்தோறும் பல்வேறு விதமான போட்டி கள், விளை யாட்டுகள், கலை நிகழ்ச்சிகள், கண்காட்சிகள் நடத்தப்பட உள்ளது.
2-வது நாளான நேற்று ஏற்காடு டவுன் பேசன் ஷோ மைதானத்தில் இளைஞர் நலன் மற்றும் விளை யாட்டுத்துறை சார்பில் இளைஞர்களுக்கான கைப்பந்து போட்டியும், கலைய ரங்கத்தில் கலைப் பண்பாட்டுத்துறை சார்பில் கரகம், மான், மயில், காவடி உள்ளிட்ட கிராமிய கலை நிகழ்ச்சியும், சுற்றுலாத் துறை சார்பில் கலை நிகழ்ச்சிகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகள், தாரை, தப்பட்டை நிகழ்ச்சிகளும் நடந்தன. மாலை 4 மணிக்கு கல்வித்துறை சார்பில் பல்சுவை நிகழ்ச்சியும் நடந்தது.
கோடை விழாவின் 3-ம் நாளான இன்றும், மாவட்ட நிர்வாகம் சார்பில் சுற்றுலா பயணி களுக்கும், இளைஞர்க ளுக்கும், அரசு ஊழியர்க ளுக்கும் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டது.
இந்த விழாவையொட்டி ஏற்காட்டில் தங்கும் விடுதி, ஓட்டல்களில் அறைகள் நிரம்பியுள்ளன. ஏற்காட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகள் அங்கு விளையும் பலாப்பழம், பச்சை மிளகு, காய்ந்த மிளகு, காப்பிக் கொட்டை, காபி தூள், ஆட்டுக்கால் கிழங்கு, ஆரஞ்சு பழம், கொய்யா, அத்தி, முள் சீத்தா, பேரிக்காய் உள்ளிட்ட பழங்களை ஆர்வமாக வாங்கி செல்கின்றனர்.
இதனிடையே நேற்று மதியம் ஏற்காட்டில் திடீரென பலத்த மழை பெய்தது. இதனால் அங்கு தாழ்வான இடங்களில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. ஏற்காடு மலைப்பாதையில் ஆங்காங்கே உள்ள நீரோட்டங்களில் மழைநீர் ஓடியதைக் கண்டு சுற்றுலா பயணிகள் மகிழ்ந்தனர்.
ஏராளமான சுற்றுலா பயணிகளின் வருகையால், மலைப்பாதையில் வாகனங்கள் அதிகளவில் வந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.