புகார் அளிக்க சென்றவரை குத்திக் கொல்ல முயன்ற வாலிபருக்கு 7 ஆண்டு சிறை
- புகார் அளிக்க சென்றவரை குத்திக் கொல்ல முயன்ற வழக்கில் வாலிபருக்கு தீர்ப்பளிக்கப்பட்டது.
- 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், மற்றும் ரூ.1000 அபராதம் அதைக் கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி தீர்ப்பு வழங்கினார்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள மயிலாடும்பாறை பகுதியில் ரேசன் கடையில் வனராஜ் என்பவர் பொருட்கள் வாங்கிய போது அதே ஊரைச் சேர்ந்த யோகேஸ்வரன் என்பவர் முந்தி சென்று பொருட்கள் வாங்கியதால் வனராஜ் மற்றும் யோகேஸ்வரன் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
இதில் யோகேஸ்வரன் மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து வனராஜாவை தாக்கியுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து புகார் கொடுக்க வனராஜ் மற்றும் அவரது மகன் ஜெயக்குமார் சென்றபோது அங்கு யோகேஸ்வரனின் சகோதரர் தயாநிதி போலீஸ் நிலையம் முன்பாக ஜெயக்குமாரை பீர் பாட்டிலை உடைத்து குத்தியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பாக மயிலாடும்பாறை போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. வழக்கு விசாரணை தேனி மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் உள்ள தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.
இந்நிலையில் வழக்கு விசாரணை முடிவுற்று தயாநிதி குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு அவருக்கு 7 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், மற்றும் ரூ.1000 அபராதம் அதைக் கட்ட தவறினால் மேலும் ஒரு மாதம் சிறை தண்டனை விதித்து நீதிபதி கோபிநாதன் தீர்ப்பு வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து தயாநிதியை போலீசார் சிறையில் அடைக்க பாதுகாப்புடன் கூட்டிச் சென்றனர்.