மதிமுக தொகுதியை மு.க.ஸ்டாலின் அறிவிப்பார்- வைகோ பேட்டி
சென்னை:
பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் போட்டியிடும் கட்சிகளுக்கு எந்தெந்த தொகுதிகளை ஒதுக்குவது என்பது குறித்து அறிவாலயத்தில் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.
காங்கிரஸ் கட்சித் தலைவர் கே.எஸ்.அழகிரி, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநில செயலாளர் பாலகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன் ஆகியோர் அண்ணா அறிவாலயத்துக்கு சென்று தங்களுக்கு ஒதுக்கப்பட வேண்டிய தொகுதிகளை பட்டியலிட்டு ஆலோசனை நடத்தினார்கள்.
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ இன்று காலை அறிவாலயத்துக்கு சென்று துரைமுருகன் தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினரை சந்தித்து பேசினார்.
அப்போது ம.தி.மு.க. வுக்கு ஒதுக்கப்படும் தொகுதி எது என்று தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக்கொண்ட வைகோ அதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
பின்னர் நிருபர்களை சந்தித்த வைகோ, ‘‘ம.தி.மு.க. போட்டியிடும் தொகுதி எது என்பதை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முறையாக அறிவிப்பார்’’ என்றார்.
ம.தி.மு.க.வுக்கு ஈரோடு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளதாக கட்சி வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு கூட்டணியில் 1 தொகுதி ஒதுக்கப்பட்டு உள்ளது. அறிவாலயத்துக்கு இன்று வந்த அக்கட்சியின் பொதுச்செயலாளர் காதர் மொய்தீன் தங்களுக்கு ராமநாதபுரம் தொகுதியை ஒதுக்கி தருமாறு கேட்டுக் கொண்டார்.
இது பற்றி அவர் நிருபர்களிடம் கூறுகையில் கூட்டணி கட்சிகளிடம் கலந்து பேசி இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒதுக்கப்படும் தொகுதி எது என்பதை மு.க.ஸ்டாலின் அறிவிப்பார் என்றார். #vaiko #mkstalin #parliamentelection