செய்திகள் (Tamil News)

தென்மாநில மக்களின் உரிமைகளை மோடி அரசு புறக்கணிக்கிறது- நாராயணசாமி குற்றச்சாட்டு

Published On 2019-04-27 05:05 GMT   |   Update On 2019-04-27 05:05 GMT
மோடி தலைமையிலான அரசு தென்மாநில மக்களின் உரிமைகளை புறக்கணிப்பதாக புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி தெரிவித்தார். #Congress #Narayanasamy #Modi
திருச்செந்தூர்:

புதுச்சேரி முதல்-மந்திரி நாராயணசாமி நேற்று சாமி தரிசனத்திற்காக திருச்செந்தூர் கோவிலுக்கு வந்தார். பின்னர் இரவில் விருந்தினர் மாளிகையில் தங்கிய அவர் இன்று காலை நடைபெற்ற விஸ்வரூபதரிசனத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணி கட்சியினர் தீவிர பிரசாரம் செய்தனர். இதன் விளைவாக மத்தியிலும், மாநிலத்திலும் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பியுள்ளனர். இதையடுத்து மத்தியில் ராகுல்காந்தி தலைமையிலும், மாநிலத்தில் ஸ்டாலின் தலைமையிலும் ஆட்சி மாற்றம் ஏற்படும். மோடி தலைமையிலான அரசு தென்மாநில மக்களின் உரிமைகளை புறக்கணிக்கிறது. மேலும் மக்கள் விரோத செயல்களில் ஈடுபடுகிறது. இதற்கு அ.தி.மு.க. அரசு உறுதுணையாக உள்ளது.



தமிழக மாணவர்களை பாதிக்கும் நீட் தேர்வு, விவசாயிகளை பாதிக்கும் எட்டு வழிச்சாலை திட்டம், ஹைட்ரோகார்பன் திட்டம் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே மக்கள் தி.மு.க.-காங்கிரஸ் கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர். தமிழகம்-புதுச்சேரியில் 39 தொகுதிகளிலும், 22 சட்டமன்ற இடைத்தேர்தல்களிலும் நாங்கள் நிச்சயமாக வெற்றிபெறுவோம். இதனால் மத்தியிலும், மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்படும்.

மோடி ஆட்சியில் தலித் மற்றும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பில்லை. 7-வது சம்பள கமி‌ஷன் நிறைவேற்றப்படவில்லை. மோடி தனது 5 ஆண்டு சாதனை பற்றி பேசாமல் புல்வாமா தாக்குதல் பற்றி பேசி வருகிறார். ஜி.எஸ்.டி. வரியால் 6 கோடி மக்கள் வேலையை இழந்து தெருவில் நிற்கின்றனர். 10 கோடி பேருக்கு வேலை வழங்குவதாக கூறினார். ஆனால் வழங்கவில்லை.

இவ்வாறு முதல்-மந்திரி நாராயணசாமி கூறினார்.

பேட்டியின் போது காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் ஜெயந்திநாதன், விவசாய அணி மாவட்ட தலைவர் வேல் ராமகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர் வக்கீல் சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர். #Congress #Narayanasamy #Modi
Tags:    

Similar News