உள்ளூர் செய்திகள்

கோப்புபடம்.

உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்கள் அமைக்க நிதியுதவி - தகுதியானவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு

Published On 2022-08-11 07:47 GMT   |   Update On 2022-08-16 13:21 GMT
  • 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
  • ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெறலாம்.

திருப்பூர் :

பாரத பிரதமர் உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான திட்டம் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது. 2021-25-ம் ஆண்டு வரை 5 ஆண்டுகளுக்கு செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டம் மத்திய அரசின் 60 சதவீதம் மற்றும் மாநில அரசின் 40 சதவீதம் நிதி பங்களிப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டம் மத்திய அமைச்சக உணவு பதப்படுத்தும் தொழில்துறை வழியாக, தமிழ்நாட்டில் வேளாண்மை விற்பனை துறை மூலம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையின் கீழ் நியமிக்கப்படும் குழுவின் மூலம் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. உணவு பதப்படுத்தும் சிறு நிறுவனங்களுக்கான இந்த திட்டத்தின் மூலம் தனிநபர் மற்றும் குழு அடிப்படையில் ஏற்கனவே உணவு பதப்படுத்தும் தொழிலில் ஈடுபட்டுள்ள சிறு நிறுவனங்களை வலுப்படுத்துதல் அல்லது புதிய நிறுவனங்கள் தொடங்குதல், பொது உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துதல், வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதல், தொழில்நுட்ப பயிற்சிகள் போன்ற இனங்களுக்கு நிதி உதவி வழங்கப்படும்.

இந்த திட்டத்தின் மூலம் சிறு உணவு பதப்படுத்துதல் நிறுவனம், தகுதியான திட்ட மதிப்பில் 35 சதவீதம் அல்லது அதிகபட்சமாக ரூ.10 லட்சம் வரை நிதி உதவி பெற்று பயன்பெறலாம். வர்த்தக முத்திரை மற்றும் சந்தைப்படுத்துதலுக்கு 50 சதவீத மானியம் வழங்கப்படும். சிறு உணவு பதப்படுத்தும் நிறுவனங்களுக்கு தேவைப்படும் தொழில்கடன் தொகை வங்கி மூலம் ஏற்பாடு செய்து தரப்படும்.

திருப்பூர் மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கி வரும் உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள் மற்றும் புதிதாக ஈடுபட உள்ள நிறுவனங்கள் இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சலுகைகளை பெற்று பயன்பெறலாம். மேலும் விவரங்களுக்கு கோவை மாவட்ட வேளாண்மை துணை இயக்குனரை (வேளாண் வணிகம்) 98656 78453 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று கலெக்டர் வினீத் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News