இந்தியா

பயமுறுத்திய 12 அடி நீள ராஜநாகம்- லாவகமாக பிடித்து வனப்பகுதிக்குள் விட்ட வீரர்கள்... வீடியோ

Published On 2024-07-20 02:41 GMT   |   Update On 2024-07-20 02:41 GMT
  • மக்களுக்கும் பாம்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விடைபெற்றனர்.
  • பாம்பு பிடிக்கும் வீரர் லாவகமாக குச்சியால் அதை சுவர் பக்கமாக திருப்பிவிட, அது பொந்து என நினைத்து பைக்குள் தஞ்சம் அடைந்தது.

கர்நாடகாவின் அகும்பே பகுதி மழைக்காடுகள் நிறைந்த செழுமையான இடமாகும். இங்குள்ள குடியிருப்பு பகுதியில் பிரமாண்ட ராஜநாகம் ஒன்று புகுந்ததை மக்கள் கண்டனர். அது ஒரு வீட்டை ஒட்டிய புதரில் புகுந்து மரத்தின் மீது ஏறிவிட்டது. மரத்தில் நின்ற பாம்பை ஊரே கூடி வேடிக்கை பார்த்தது. அதற்குள்ளாக தகவல் அறிந்து மழைக்காடு ஆராய்ச்சி நிலைய பாம்பு பிடி வீரர்கள் களத்திற்கு வந்தனர்.

அவர்கள் மரத்தில் நின்ற பாம்பை கீழே இறக்க சற்று சிரமப்பட்டனர். நீளமான அந்தப் பாம்பு பயங்கரமாக சீறிக் கொண்டே இருக்கிறது.

இறுதியில் அந்த பாம்பை வாலைப் பிடித்து மரத்தில் இருந்து கீழே இறங்கினார் ஒரு பாம்பு பிடி வீரர். மற்றொரு பெண் வன அதிகாரி, சுவரை ஒட்டி பாம்பு பிடிக்கும் பையை வைத்து அதன் வாய்ப்பகுதியில் ஒரு குழாயை கட்டி, பொந்து போல ஏற்பாடு செய்கிறார். கீழே இறக்கப்பட்ட பாம்பு எந்தப்பக்கம் செல்வது என்று பரபரப்பாக ஓடும்போது, பாம்பு பிடிக்கும் வீரர் லாவகமாக குச்சியால் அதை சுவர் பக்கமாக திருப்பிவிட, அது பொந்து என நினைத்து பைக்குள் தஞ்சம் அடைந்தது. அதை மூட்டை கட்டிய அதிகாரிகள் வனப்பகுதிக்குள் கொண்டு பாதுகாப்பாக விடுவித்தனர்.

மக்களுக்கும் பாம்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கி விடைபெற்றனர். இதுபற்றிய வீடியோவை ஆராய்ச்சி நிலைய அதிகாரிகள் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டனர். ஐ.எப்.எஸ். அதிகாரி சுசந்தா நந்தா எக்ஸ் தளத்தில் பகிர்ந்தார். அவை இரண்டும் லட்சக்கணக்கானவர்களின் பார்வையை ஈர்த்தது.





Tags:    

Similar News