மணிப்பூர் கலவரத்தில் 142 பேர் பலி.. 5,995 வழக்குகள்: புதிய நிலை அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல்
- மே மாதம் தொடங்கி மாநிலத்தில் 5000 வன்முறை அல்லது தீவைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.
- நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன.
புதுடெல்லி:
மணிப்பூரில் கடந்த 2 மாதங்களில் நடந்த வன்முறையில் மொத்தம் 142 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று பிரேன் சிங் அரசு உச்ச நீதிமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளது.
மணிப்பூரில் வன்முறையைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கவும் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து புதுப்பிக்கப்பட்ட அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் கடந்த வாரம் கூறியிருந்தது.
அதன்படி தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் மற்றும் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு தாக்கல் செய்யப்பட்ட புதிய நிலை அறிக்கையில், நிலைமையை கட்டுக்குள் வைத்திருக்க 5,995 எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், 6,745 பேர் காவலில் வைக்கப்பட்டுள்ளனர் என்றும் மாநில தலைமைச் செயலாளர் வினீத் ஜோஷி கூறியுள்ளார். மேலும், 6 வழக்குகள் சிபிஐ விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் தொடங்கி மாநிலத்தில் 5000 வன்முறை அல்லது தீவைப்பு சம்பவங்கள் நடந்துள்ளன என்றும் இதில் இம்பால் கிழக்கு மற்றும் இம்பால் மேற்கு மாவட்டங்களில் அதிகபட்ச இறப்புகள் பதிவாகியுள்ளன என்றும் அறிக்கை கூறுகிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க மாநில அரசு எடுத்த நடவடிக்கைகளை பட்டியலிட்டுள்ளது. அந்த பட்டியலின்படி:
அமைதியை நிலைநாட்டுவதற்காக 124 கம்பெனி துணை ராணுவ வீரர்களும், 184 ராணுவப் படைகளும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மாணவர்களை அருகில் உள்ள பள்ளிகளில் இணைக்கும் முயற்சிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், மாநிலத்தில் பல போட்டித்தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. மாநிலத்தில் இன்டர்நெட் இணைப்பு 2 மாதங்களாக துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் தேவைக்கேற்ப இணையத்தடையை நிபந்தனையுடன் தளர்த்துவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. ஊரடங்கு உத்தரவு தளர்வு நேரங்கள், உள்ளூர் நிலைமைகளை மதிப்பிட்ட பிறகு அதிகரிக்கப்படும்.
இவ்வாறு அரசு தெரிவித்துள்ளது.
மனுதாரர்கள் தங்கள் வாதங்களின்போது போராடி வரும் பழங்குடியினரின் இரு பிரிவினரின் பெயர்களையும் குறிப்பிட வேண்டாம் என்று மாநில அரசு வலியுறுத்தியது குறிப்பிடத்தக்து.