இந்தியா

சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்து மூலம் ரெயில்வேக்கு ரூ.1.83 லட்சம் கோடி வருவாய்

Published On 2023-01-03 02:33 GMT   |   Update On 2023-01-03 02:33 GMT
  • பயணிகள் போக்குவரத்தின் மூலமும் ரெயில்வேயின் வருவாய் அதிகரித்துள்ளது.
  • இந்திய ரெயில்வே கடந்த நிதியாண்டை விட, அதிக வருவாய் ஈட்டியிருக்கிறது.

புதுடெல்லி :

கடந்த ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் சரக்கு மற்றும் பயணிகள் போக்குவரத்தில் இந்திய ரெயில்வேக்கு மொத்தம் ரூ.1,83,964 கோடி வருவாய் கிடைத்துள்ளது. இதுபற்றி ரெயில்வே வெளியிட்டுள்ள தகவல்கள் வருமாறு:-

சரக்கு ஏற்றுதல் மற்றும் சரக்கு போக்குவரத்தில் 2022-2023-ம் நிதியாண்டின் முதல் 9 மாதங்களில் (ஏப்ரல் முதல் டிசம்பர் வரை) இந்திய ரெயில்வே கடந்த நிதியாண்டை விட, அதிக வருவாய் ஈட்டியிருக்கிறது. இந்த காலக்கட்டத்தில் இந்திய ரெயில்வேயில் 1,109.38 டன் சரக்குகள் கையாளப்பட்டிருக்கின்றன. கடந்த நிதியாண்டில் இதே காலக்கட்டத்தில், 1,029.96 டன் சரக்குகள் மட்டுமே கையாளப்பட்டன. இதன் மூலம் சரக்குகள் கையாளுதல் 8 சதவீதம் அதிகரித்துள்ளது.

வருவாயைப் பொறுத்தவரை, சரக்கு போக்குவரத்து மற்றும் சரக்கு ஏற்றுதல் உள்ளிட்ட வகைகளில் மொத்தம் ரூ.1,35,051 கோடி கிடைத்துள்ளது. 2022-ம் ஆண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலக்கட்டத்தில் பயணிகள் போக்குவரத்தின் மூலமும் ரெயில்வேயின் வருவாய் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டைவிட 71 சதவீதம் அதிகமாக ரூ.48,913 கோடி வருவாய் ஈட்டப்பட்டு உள்ளது.

முன்பதிவு பயணிகளின் எண்ணிக்கை 6 சதவீதம் அதிகரித்து 59.61 கோடியாக இருந்தது. இதன்மூலம் வருவாய் 46 சதவீதம் அதிகரித்து ரூ.38,483 கோடி ரூபாயை எட்டியது. முன்பதிவில்லா பயணிகளின் எண்ணிக்கை 137 சதவீதம் அதிகரித்து 40,197 லட்சமாக இருந்தது. இதன் மூலம் வருவாய் 381 சதவீதம் அதிகரித்து ரூ.10,430 கோடி ஆனது.

இவ்வாறு ரெயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News