கூண்டோடு தாவும் 19 எம்.எல்.ஏக்கள்? வருபவர்களை ஏற்கிறோம் - ஆனால்.. சரத் பவார் வைத்த கண்ணி!
- நாளை ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடக்க உள்ளது
- எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான்.
மகாராஷ்டிராவின் பழம்பெரும் கட்சியான சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கிறது. முன்னதாக சரத் பவாரின் மகன் அஜித் பவார் கட்சியை உடைத்து தனது ஆதரவாளர்களுடன் பாஜகவுக்கு ஆதரவு அளித்து கடந்த 2022 ஆம் ஆண்டு பாஜக - ஷிண்டே சிவசேனா கூட்டணி ஆட்சியைப் பிடித்தபோது மகாராஷ்டிராவின் துணை முதலமைச்சர் ஆனார்.
சரத் பவார் அணி - அஜித் பவார் அணி என தேசியவாத காங்கிரஸ் பிரிந்து மகாராஷ்டிர அரசியல் களத்தை விறுவிறுப்பாக்கியுள்ள நிலையில் விரைவில் அம்மாநிலத்தில் வர உள்ள சட்டமன்ற தேர்தல் அந்த விறுவிறுப்பை இரட்டிப்பாகியுள்ளது.
இந்த நிலையில்தான் நாளை ஜூன் 27 தொடங்கி ஜூலை 12 வரை நடக்க உள்ள சட்டமன்ற மழைக்காலக் கூட்டத் தொடருக்குப்பின் பாஜகவுடன் உள்ள அஜித் பவார் அணியிலிருந்து 18 முதல் 19 எம்எல்ஏக்கள் தங்கள் அணிக்கு வந்துவிடுவார்கள் என சரத் பவாரின் உறவினரும் தேசியவாத காங்கிரசின் முக்கிய தலைவருமான ரோகித் பவார் சமீபத்தில் பொதுக்கூட்டத்தில் தெரிவித்தது மகாராஷ்டிர அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள தேசியவாத கட்சித் தலைவர் சரத் பவார், எதிர்க் கூட்டணியில் உள்ள எம்.எல்.ஏக்கள் மீண்டும் எங்களிடம் வருவதில் மகிழ்ச்சிதான். ஆனால் எங்களின் கட்சியை பலவீனப்படுத்தும் நோக்கத்தில் வருபவர்களை நாங்கள் ஏற்றுக்கொள்ள மாட்டோம்.
மாறாக எங்கள் கட்சியை வலுப்படுத்த விரும்புபவர்களாகவும் கட்சியின் கண்ணியத்தை குலைக்காதவர்களாகவும் இருந்தால் மட்டுமே அவர்களை ஏற்றுக்கொள்வோம். அதுவும் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுடன் ஆலோசித்த பின்னரே அவர்களை ஏற்றுக்கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.
இதன்மூலம் சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்ததும் அஜித் பவாரின் எம்.எல்.ஏக்கள் சரத் பவார் அணிக்குத் தாவ அதிக வாய்ப்புள்ளதாக உறுதிபட தெரிகிறது என்று அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.