செய்திகள்

தற்கொலை செய்ய அனுமதி கேட்டு திருநங்கை நர்சு மனு

Published On 2018-05-16 07:55 GMT   |   Update On 2018-05-16 07:55 GMT
கேரள மாநிலத்தில் தற்கொலை செய்ய அனுமதிக்க வேண்டும் என்று திருநங்கை நர்சு திருச்சூர் கலெக்டரிடம் மனு அளித்தார். #transgender
கொழிஞ்சாம்பாறை:

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டம் தலைக்காட்டூர் பகுதியை சேர்ந்தவர் ஸிஜி (வயது 51). திருநங்கை. இவர் கடந்த 1989-ம் ஆண்டு கோழிக்கோடு பல்கலைக்கழகத்தில் பி.எஸ்.சி. நர்சிங் முடித்தார்.

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு சவுதி அரேபியாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் நர்சாக பணியாற்றினார். அங்கு அதிக சம்பளம் மற்றும் நவீன வசதிகளுடன் வாழ்ந்து வந்தார்.

இந்நிலையில் விசாவை புதுப்பிக்காததால் சவுதி அரசு ஸிஜியை நாட்டை விட்டு வெளியேற்றியது. கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கேரள மாநிலம் திருநல்லாவில் உள்ள தனது வீட்டுக்கு வந்தார்.

இங்கிருந்து பல ஆஸ்பத்திரிகளில் நர்சிங் வேலை கேட்டார். ஆனால் எந்த ஆஸ்பத்திரியும் ஸிஜிக்கு வேலை கொடுக்க முன்வரவில்லை. இதனையடுத்து வருமானம் இல்லாமல் இருந்தார். இதனால் குடும்பத்தினர் ஸிஜியை வெறுத்தனர்.

குடும்பத்திற்கு சுமையாக இருக்க விரும்பாத அவர் தலைக்காட்டு என்ற பகுதியில் வாடகைக்கு குடியேறினார். அங்கு அவர் உணவுக்கு கூட வழியில்லாமல் இருந்தார்.

சவுதி அரேபியாவில் வருமானம் மற்றும் மரியாதையோடு வாழ்ந்த ஸிஜிக்கு இந்த வாழ்க்கை கொடுமையாக இருந்தது.

இதனால் நேற்று திருச்சூர் கலெக்டர் கவுசிகனை சந்தித்து மனு அளித்தார். அதில் நான் இங்கு கவுரவமாக வாழ விரும்புகிறேன். ஆனால் அதற்கான நிலைமை இங்கு இல்லை. அதனால் கவுரவமாக சாக விரும்புகிறேன். கருணையோடு நான் தற்கொலை செய்வதை அனுமதிக்க வேண்டும் என்று மனு அளித்தார். இதை அறிந்த கலெக்டர் அதிர்ச்சியடைந்தார். இருந்தாலும் 4 நாட்கள் கழித்து பதில் கூறுகிறேன் என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்.

திருநங்கை தற்கொலைக்கு மனு அளித்த தகவல் சமூக வலைதளங்களில் பரவியது. இதனையடுத்து கொல்லம் காயபுரம் அசரியம் என்ற ஆதரவற்றோர் இல்ல நிர்வாகிகள் ஸிஜியை தொடர்பு கொண்டு கவுரவமாக வாழ வழி செய்வதாக உறுதியளித்தனர். ஸிஜியும் இல்ல நிர்வாகிகளின் சமாதானத்தை ஏற்றுக்கொண்டார். #transgender
Tags:    

Similar News