செய்திகள்

ஈராக்கில் படுகொலை செய்யப்பட்ட 39 இந்தியர்கள் தொடர்பான பொதுநல வழக்கு தள்ளுபடி

Published On 2018-06-06 11:04 GMT   |   Update On 2018-06-06 11:04 GMT
ஈராக்கில் 39 இந்தியர்கள் கடந்த 2014-ம் ஆண்டு கடத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட பொதுநல வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. #Iraq #39indians
புதுடெல்லி :

ஈராக் நாட்டின் மோசூல் நகரில் ஐ.எஸ். தீவிரவாதிகளால் கடந்த 2014-ம் ஆண்டு 39 இந்தியர்கள் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட அவர்களைப் பற்றி எந்த தகவலும் கிடைக்காமல் இருந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அனைவரும் மரணமடைந்ததாக வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் மாநிலங்களவையில் தெரிவித்தார்.  

மெஹ்மூத் ப்ரச்சா எனும் வழக்கறிஞர் படுகொலை செய்யப்பட்ட 39 இந்தியர்கள் தொடர்பாக பொது நல வழக்கு ஒன்றை டெல்லி உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார். கடத்தபட்ட இந்தியர்கள் இறந்தது பற்றி முன்பே இந்திய அரசுக்கு தெரிந்திருந்தும், அந்த தகவலை வெளியிடாமல் காலம் தாழ்த்தி வந்துள்ளது. பின்னர், அவர்கள் அனைவரும் இறந்துவிட்டதாக மிக தாமதமாக இந்திய அரசு தெரிவித்தது.

எனவே, அவர்கள் அனைவரும் எப்போது? எப்படி இறந்தார்கள்? என்பது பற்றி இந்திய அரசு தெரிவிக்க வேண்டும் என பொது நல மனுவில் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில், இன்று டெல்லி உயர் நீதிமன்றத்தில் நீதிபதிகள் கீதா மிட்டல் மற்றும் ஹரி சங்கர் முன்னிலையில் இந்த பொதுநல வழக்கு விசாரணைக்கு வந்தது.

மத்திய அரசு தரப்பில் ஆஜரான மானிக் டோக்ரா இந்த வழக்கில் எந்த பொதுநல எண்ணமும் இல்லை எனவே வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். இறுதியாக, படுகொலை செய்யப்பட்ட 39 இந்தியர்கள் தொடர்பான இந்த பொது நல வழக்கு கண்டிக்கத்தக்கது. இது போன்ற வழக்குகளை ஊக்கப்படுத்தவும் முடியாது என கூறி வழக்கை தள்ளுபடி செய்து உததரவிட்டனர்.

மேலும், பொதுநல வழக்கு தொடர்ந்த மெஹ்மூத் ப்ரச்சாவிற்கு ஒரு லட்ச ரூபாய் அபராதமும் வித்தித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.  #Iraq #39indians
Tags:    

Similar News