செய்திகள்

அவதூறு வழக்கு - தானே நீதிமன்றத்தில் இன்று ஆஜராகிறார் ராகுல்

Published On 2018-06-12 03:34 GMT   |   Update On 2018-06-12 03:34 GMT
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தொடர்ந்த அவதூறு வழக்கு மீதான விசாரணையில் ராகுல்காந்தி இன்று தானேவில் உள்ள நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகிறார். #RSS #rahulgandhi #defamationcase
மும்பை:

2014-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலின்போது பிரச்சாரத்தில் பேசிய ராகுல்காந்தி, ஆர்.எஸ்.எஸ் அமைப்பு தான் மகாத்மா காந்தியை கொன்று விட்டதாக கூறினார். இதற்கு ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதையடுத்து, அந்த அமைப்பைச் சேர்ந்த ராஜேஷ் குந்தே என்பவர் ராகுல்காந்தி மீது அவதூறு வழக்கு ஒன்றை பதிவு செய்தார். இந்த வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ராகுல்காந்தி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் அந்த மனுவை வாபஸ் பெற்ற ராகுல்காந்தி, இந்த வழக்கை நேருக்கு நேர் சந்திக்க போவதாக தெரிவித்திருந்தார்.

இதையடுத்து கடந்த ஜனவரி மாதம் 17-ம் தேதி மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள பிவண்டி நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது ராகுல்காந்தி ஏப்ரல் 23-ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அப்போது, ராகுல்காந்தி நேரில் ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு அவரது வழக்கறிஞர் சார்பில் மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நேரில் ஆஜராவதில் இருந்து ராகுல் காந்திக்கு விலக்கு அளித்து விசாரணையை ஒத்திவைத்தது.



இந்நிலையில், ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த அவதூறு வழக்கு மீதான விசாரணை பிவண்டி நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. இந்த வழக்கு விசாரணையில் நேரில் ஆஜராவதற்காக காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல்காந்தி மும்பை வந்தடைந்தார்.

அவதூறு வழக்கு விசாரணையின்போது, நீதிமன்றத்தில் ஆஜராகி விளக்கம் அளிக்க உள்ளார் ராகுல்காந்தி. #RSS #rahulgandhi #defamationcase
Tags:    

Similar News