செய்திகள்
பாராளுமன்ற தேர்தல் ஏற்பாடு - குஜராத் பா.ஜ.க.வினருடன் நாளை அமித் ஷா ஆலோசனை
பாராளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள வகுக்க வேண்டிய பிரசார வியூகம் தொடர்பாக குஜராத் மாநில பா.ஜ.க. நிர்வாகிகளுடன் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா நாளை ஆலோசனை நடத்துகிறார். #AmitShah #GujaratBJP #chintanshibir
அகமதாபாத்:
பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதத்தில் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தேசிய கட்சிகள் இப்போதே பிரசார வியூகம் தொடர்பாக ஆலோசித்து வருகின்றன.
அவ்வகையில், குஜராத் மாநில தலைநகரான அகமதாபாத்தில் நாளை தொடங்கி ‘சிந்தன் ஷிபிர்’ என்னும் இருநாள் ஆலோசனை கருத்தரங்கம் நடைபெறுகிறது. இதில் பா.ஜ.க. தேசிய தலைவர் அமித் ஷா, தேசிய செயலாளர் வி.சத்தீஷ், குஜராத் மாநில பொறுப்பாளர் புபேந்திரா யாதவ், மத்திய மந்திரி பர்ஷோத்தம் ருபாலா, முதல் மந்திரி விஜய் ருபானி, துணை முதல் மந்திரி நிதின் பட்டேல் உள்ளிட்டவர்கள் கலந்து கொள்கின்றனர்.
குஜராத்தில் உள்ள 26 பாராளுமன்ற தொகுதிகளுக்கும் தனித்தனியாக தேர்தல் பணிக்குழுக்களை அமைப்பது தொடர்பாகவும், இதர பிரசார ஏற்பாடுகள் தொடர்பாகவும் இந்த கருத்தரங்கில் தீர்மானிக்கப்பட உள்ளது.
மேலும், முன்னாள் பிரதமர் மறைந்த இந்திரா காந்தி ஆட்சி காலத்தின்போது அமல்படுத்தப்பட்ட ‘மிசா’ என்னும் அவசரநிலை சட்டத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாளை விருதுகள் அளித்து கவுரவிக்கும் பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்துள்ளனர். #AmitShah #GujaratBJP #chintanshibir