செய்திகள்

அமைதியற்ற சூழல் நிலவினால் ஆதாயம் அடையலாம் என நினைக்கின்றன - எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி கடும் தாக்கு

Published On 2018-06-28 21:29 GMT   |   Update On 2018-06-28 21:29 GMT
அமைதியற்ற சூழ்நிலை நிலவினால், அரசியல் ரீதியில் ஆதாயம் அடையலாம் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன என்று பிரதமர் மோடி சாடினார். #PoliticalBenefit #Modi
லக்னோ:

அமைதியற்ற சூழ்நிலை நிலவினால், அரசியல் ரீதியில் ஆதாயம் அடையலாம் என எதிர்க்கட்சிகள் நினைக்கின்றன என்று பிரதமர் மோடி சாடினார்.

உத்தரபிரதேச மாநிலம், வாரணாசியில் பிறந்து மிகப்பெரிய மத குருவாகவும், கவிஞராகவும் திகழ்ந்தவர் கபீர்தாசர்.

அவரது 500-வது நினைவு தினத்தையொட்டி, உத்தரபிரதேச மாநிலம், சந்த் கபீர்நகர் மாவட்டம், மகாரில் அமைந்து உள்ள அவரது நினைவிடத்துக்கு பிரதமர் நரேந்திரமோடி நேற்று சென்று மரியாதை செலுத்தினார்.



அன்னாரின் நினைவைப் போற்றும் விதமாக ரூ.24 கோடியில் அமைய உள்ள சந்த் கபீர் அகாடமி என்னும் ஆராய்ச்சி நிறுவனத்துக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.

அந்த நிகழ்ச்சியில் அவர் பேசியபோது கூறியதாவது:-

நாட்டில் நெருக்கடி நிலையை அமல்படுத்தியவர்களும், அதை எதிர்த்தவர்களும் இன்றைக்கு ஒன்று சேர்ந்து இருக்கிறார்கள்.

சில கட்சிகள் அமைதியையும், வளர்ச்சியையும் விரும்புவது இல்லை. அமைதி இல்லாத சூழ்நிலை உருவானால், அதன்மூலம் தாங்கள் அரசியல்ரீதியாக பலன் அடைய முடியும் என அவர்கள் (எதிர்க்கட்சிகள்) நினைக்கின்றனர்.

ஆனால் உண்மை கள நிலவரம் என்னவென்றால், அவர்கள் மக்களோடு துண்டிக்கப்பட்டு விடுகிறார்கள். கபீர்தாசர், மகாத்மா காந்தி, பாபாசாகேப் அம்பேத்கர் ஆகியோர் வாழ்ந்த இந்த தேசம் எப்படிப்பட்டது என்பது அவர்களுக்கு தெரியாது.

சமாஜ்வாத் (சோஷலிசம்) பற்றி எப்போதும் பேசுகிறவர்களும், பகுஜன்(வெகு ஜனங்கள்) பற்றி பேசுகிறவர்களும் மிகுந்த சுயநலவாதிகளாக விளங்குகின்றனர். (சமாஜ்வாடி கட்சியையும், பகுஜன் சமாஜ் கட்சியையும் இப்படி சாடினார்).

சமூகத்தின் நலன்பற்றி அவர்கள் பார்ப்பது கிடையாது. அவர்கள் தங்கள் நலனையும், தங்கள் குடும்பத்தின் நலனையும்தான் கருத்தில் கொள்கின்றனர்.

முஸ்லிம் பெண்கள் கேட்டும், நாடாளுமன்றத்தில் முத்தலாக் மசோதா நிறைவேற விடாமல் அவர்கள் (எதிர்க்கட்சிகள்) தடை செய்கின்றனர்.

அம்பேத்கர் சமூகத்தின் சமத்துவத்துக்காக குரல் கொடுத்தார். ஆனால் துரதிர்ஷ்டவசமாக அரசியல் கட்சிகள் அவரது கொள்கைகளை தங்கள் அரசியல் ஆதாயத்துக்காக பயன்படுத்துகின்றன.

இவ்வாறு அவர் கூறினார்.  #Tamilnews 
Tags:    

Similar News