செய்திகள்

எல்லா பொருட்களுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்க முடியாது - பிரதமர் மோடி பேட்டி

Published On 2018-07-01 20:30 GMT   |   Update On 2018-07-01 20:30 GMT
சரக்கு சேவை வரியின் கீழ், எல்லா பொருட்களுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதிக்க முடியாது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார். #NarendraModi #GST
புதுடெல்லி:

சரக்கு சேவை வரி (ஜி.எஸ்.டி.) அமலுக்கு வந்து ஓராண்டு ஆகிறது. இதையொட்டி, பிரதமர் நரேந்திர மோடி, ‘சுயராஜ்யா’ என்ற பத்திரிகைக்கு பேட்டி அளித்துள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

மத்திய அரசின் மறைமுக வரிகளையும், மாநில அரசுகளின் ‘வாட்’ போன்ற வரிகளையும் ஒருங்கிணைத்து சரக்கு சேவை வரி கொண்டுவரப்பட்டுள்ளது. மறைமுக வரிகளை எளிமைப்படுத்துவதும், தகவல் தொழில்நுட்ப உதவியுடன் இன்ஸ்பெக்டர் ராஜ்யத்தை ஒழிப்பதும் இதன் நோக்கம் ஆகும். கணக்கு தாக்கல் முதல் கூடுதலாக செலுத்தப்பட்ட வரி தொகையை திருப்பி கொடுப்பது வரை எல்லாமே ஆன்லைனில் நடக்கிறது.

முன்பெல்லாம் நிறைய வரிகள், மறைவாக காணப்பட்டன. ஆனால், இப்போது நீங்கள் வெளிப்படையாக வரி செலுத்துகிறீர்கள்.

17 வரிகளையும், 23 உப வரிகளையும் ஒரே வரியாக இது ஒருங்கிணைத்துள்ளது. இதை அமல்படுத்தியபோது, இதை எளிமைப்படுத்த வேண்டும் என்பதே நமது நோக்கமாக இருந்தது. இவ்வளவு பெரிய சீர்திருத்தம் மேற்கொள்ளப்படும்போது, சில பிரச்சினைகள் தோன்றுவது இயல்புதான். ஆனால், அவை அடையாளம் காணப்பட்டதுடன், உரிய நேரத்தில் தீர்க்கப்பட்டுள்ளது.

சரக்கு சேவை வரி, ஒத்துழைப்பான கூட்டாட்சி முறைக்கு சிறந்த உதாரணம். மாநிலங்களை ஒருங்கிணைத்து ஒருமித்த கருத்தை உருவாக்கி உள்ளோம். முந்தைய அரசுகள், இதில் தோல்வி அடைந்து விட்டன.

சுதந்திரம் பெற்ற காலத்தில் இருந்தே மொத்தம் 66 லட்சம் மறைமுக வரி செலுத்துபவர்கள்தான் இருந்தனர். ஆனால், சரக்கு சேவை வரி அமலுக்கு பிறகு, புதிதாக 48 லட்சம் நிறுவனங்கள் வரி செலுத்த பதிவு செய்துள்ளன. அதாவது, வரி செலுத்துவோர் எண்ணிக்கை 70 சதவீதம் அதிகரித்துள்ளது.

சுமார் 350 கோடி விலை விவர பட்டியல் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. 11 கோடி கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சரக்கு சேவை வரி சிக்கலானதாக இருந்தால், இவ்வளவு எண்ணிக்கையை கண்டிருக்க முடியுமா?

நாடு முழுவதும் சோதனைச் சாவடிகள் அகற்றப்பட்டுள்ளன. மாநில எல்லைகளில் வாகனங்களின் வரிசை இல்லை. இதனால், சரக்கு வாகன டிரைவர்களின் நேரம் மிச்சமாவதுடன், தளவாட பொருட்கள் துறை ஊக்கம் அடைந்து உற்பத்தி பெருகி வருகிறது. சரக்கு சேவை வரி சிக்கலானதாக இருந்தால், இவையெல்லாம் நடக்குமா?

எல்லா பொருட்களுக்கும் ஒரே விகிதத்தில் வரி விதித்தால், எளிமையானதாக இருப்பதுபோல் தோன்றலாம். ஆனால், உணவு பொருட்களுக்கு தற்போது உள்ளதுபோல், பூஜ்யம் முதல் 5 சதவீதம் வரையிலான வரி விகிதம் இல்லாமல் போய்விடும். மெர்சிடஸ் காருக்கும், உணவு பொருட்களுக்கும் ஒரே வரி விகிதம் விதிக்க முடியுமா?

காங்கிரசில் உள்ள நண்பர்கள், ஒரே வரி விகிதம் நிர்ணயிப்போம் என்று கூறுகிறார்கள். அதன்மூலம், உணவு பொருட்களுக்கு பூஜ்யம் முதல் 5 சதவீதம் வரையிலான வரிவிகிதத்துக்கு பதிலாக, 18 சதவீத வரி விதிப்போம் என்று அவர்கள் கூறுவதாகவே அர்த்தம்.

சுமார் 400 வகையான பொருட்களுக்கு சரக்கு சேவை வரி குறைக்கப்பட்டுள்ளது. 150 வகையான பொருட்களுக்கு வரி ரத்து செய்யப்பட்டுள்ளது. அரிசி, கோதுமை, சர்க்கரை, மளிகை பொருட்களுக்கு வரி குறைக்கப்பட்டுள்ளது. அன்றாட பயன்பாட்டு பொருட்களுக்கு வரி விலக்கோ அல்லது 5 சதவீத வரியோதான் விதிக்கப்படுகிறது. 85 சதவீத பொருட்களுக்கு, 18 சதவீத வரியோ அல்லது அதற்கு கீழோதான் விதிக்கப்படுகிறது.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

பிரதமர் மோடி, தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

சரக்கு சேவை வரி, ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு நன்மை விளைவித்துள்ளது. சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு வாய்ப்புகளை அதிகரித்துள்ளது. ஒளிவுமறைவற்ற தன்மையையும், உற்பத்தியையும், வர்த்தகம் செய்ய எளிதான நிலைமையையும் அதிகரித்துள்ளது.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.  #NarendraModi #GST #Tamilnews 
Tags:    

Similar News