செய்திகள் (Tamil News)

கேரளாவில் 10 நாட்களில் 28 பேரை பலி வாங்கிய கனமழை

Published On 2018-07-19 09:48 GMT   |   Update On 2018-07-19 09:48 GMT
கேரள மாநிலத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக கடந்த 10 நாட்களில் இதுவரை 28 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. #KeralaRain
திருவனந்தபுரம்:

கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்களில் நீர் தேங்கி வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

ஆழப்புழா, கோட்டயம் போன்ற மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சுமார் 569 நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் இதுவரை 86 ஆயிரத்து 598 பேர் தஞ்சம் அடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



மேலும், தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில், அடுத்த 3 நாட்களுக்கு கேரளாவில் கன மழை முதல் மிக கன மழை வரை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதையடுத்து, எம்.ஜி.ஆர் பல்கலைகழகத்தில் இன்றும் நாளையும் நடக்க இருந்த தேர்வுகள் மழை காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மழையினால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகளுக்காக சுமார் 113 கோடியே 19 லட்ச ரூபாயை கேரள அரசு ஒதுக்கியுள்ளது. மேலும், மத்திய அரசிடம் இருந்து உதவியும் கோரியுள்ளது.

கேரளாவில் கடந்த மே மாதம் முதல் மழையினால் ஏற்பட்ட விபத்துக்களில் மட்டும் சுமார் 107 பேர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 10 நாட்களில் மட்டும் சுமார் 28 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. #KeralaRain
Tags:    

Similar News