செய்திகள் (Tamil News)

ஒழுக்கமாக வாழச் சொன்னால் சர்வாதிகாரி என்கிறார்கள் - மோடி வேதனை

Published On 2018-09-02 09:14 GMT   |   Update On 2018-09-02 09:14 GMT
டெல்லியில் நடைபெற்ற துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு எழுதிய நூல் வெளியிட்டு விழாவில் பேசிய பிரதமர் மோடி ஒழுக்கமாக வாழச் சொல்பவரை சர்வாதிகாரி என்பதாக குறிப்பிட்டார். #Modi
புதுடெல்லி:

இந்தியாவின் துணை ஜனாதிபதியாக தனது முதலாம் ஆண்டு பதவிக்காலத்தை நிறைவு செய்த வெங்கையா நாயுடு தனது முக்கிய அனுபவங்களை குறிப்பிட்டு நூல் ஒன்றை எழுதியுள்ளார்.

டெல்லியில் இன்று நடைபெற்ற விழாவில் இந்த நூலினை பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டார். பாராளுமன்ற சபாநாயகர் சுமித்ரா மகாஜன், முன்னாள் பிரதமர்கள் தேவேகவுடா, மன்மோகன் சிங் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற இந்த விழாவில் பேசிய பிரதமர் மோடி வெங்கையா நாயுடுவின் பேச்சாற்றல், முற்போக்கு சிந்தனை மற்றும் தொலைநோக்குப் பார்வையை வெகுவாக பாராட்டினார்.


பல்வேறு பதவிகளை வகித்துள்ள அவர் அனைத்தையும் திறம்பட நிர்வகித்த பாங்கினை புகழ்ந்து பேசிய மோடி, மாணவப் பருவத்தில் 10 ஆண்டுகள் மற்றும் ஆந்திர மாநிலம், தேசிய அரசியலில் 40 ஆண்டுகள் என தொடர்ந்து 50 ஆண்டுகளாக வெங்கையா நாயுடு பொதுவாழ்வில் இருந்து வருகிறார்.

வாஜ்பாயின் தலைமையிலான மத்திய மந்திரிசபையில் கிராமப்புற மேம்பாட்டுத்துறை மந்திரி பதவியை அவர் விரும்பிப்பெற்று அதன் மூலம் நாட்டின் வளர்ச்சிக்கு பெருந்துணையாக இருந்ததாக குறிப்பிட்டார்.

எல்லா நிலையிலும் அவர் ஒழுக்கத்தை பேணி வந்துள்ளார். ஆனால், நாடு தற்போதுள்ள நிலையில் ஒழுக்கம் என்பதை ஜனநாயக விரோதம் என்னும் நிலை உருவாகியுள்ளது. ஒழுக்கத்தை கடைபிடிக்குமாறு கூறுபவர்களை சர்வாதிகாரி என்று அழைக்கும் அளவுக்கு ஒரு புதிய அகராதி உருவாக்கப்பட்டுள்ளது எனவும் பிரதமர் மோடி வேதனை தெரிவித்தார். #disciplineisbrandedautocratic #Modi
Tags:    

Similar News