செய்திகள்

பாலாற்றில் ஆந்திரா அணைகட்டும் வழக்கு - ஜனவரி முதல் விசாரணை நடத்துகிறது சுப்ரீம் கோர்ட்டு

Published On 2018-09-04 07:47 GMT   |   Update On 2018-09-04 07:47 GMT
ஆந்திர அரசு பாலாற்றில் தடுப்பணைகள் கட்டும் வழக்கில் ஜனவரி மாதம் முதல் தொடர்ந்து விசாரணை நடைபெறும் என்று சுப்ரீம் கோர்ட்டு அறிவித்துள்ளது. #APReservoir #SC
புதுடெல்லி:

கர்நாடகத்தில் பெங்களூர் நகரின் வடக்கே நந்தி மலைப் பகுதியில் உற்பத்தியாகும் பாலாறு கோலார் மாவட்டம் வழியாக ஆந்திராவுக்குள் நுழைந்து பின்னர் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி வழியாக தமிழகத்தில் பாய்ந்தோடி கடலில் கலக்கிறது.

பாலாறில் ஆந்திர அரசு 22 தடுப்பணைகள் கட்டி தமிழகத்துக்கு வரும் தண்ணீரை தடுத்து தேக்கி வைத்துள்ளது. வாணியம்பாடி அருகே ஆந்திர எல்லையான புல்லூரில் கனக நாச்சியம்மன் கோவில் அருகில் உள்ள தடுப்பணையை சமீபத்தில் 12 அடியாக உயர்த்தியுள்ளது. இதனால் தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு அடியோடு நின்றுவிட்டது.



இதை எதிர்த்து தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்துள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் புல்லூர் அருகே கங்குத்தி பெத்த வங்கா என்ற இடத்தில் புதிதாக தடுப்பணை கட்டும் பணியில் ரகசியமாக ஈடுபட்டு வந்துள்ளது. அணை கட்டும் பணி முடிவடையும் நிலையில் தமிழக விவசாயிகள் இதை அறிந்து தமிழக அதிகாரிகள் கவனத்துக்கு கொண்டு சென்றனர்.

இதுபற்றியும் சுப்ரீம் கோர்ட்டு கவனத்துக்கு தமிழக அரசு வக்கீல்கள் கொண்டு சென்றனர். இதை ஏற்றுக்கொண்ட சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் வருகிற ஜனவரி மாதம் முதல் பாலாறு தடுப்பணை வழக்கு விசாரணை தொடர்ந்து நடைபெறும் என்று அறிவித்தனர். #APReservoir #SC

Tags:    

Similar News