செய்திகள் (Tamil News)

சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேள் மோடி - சசி தரூர் கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம்

Published On 2018-10-28 12:26 GMT   |   Update On 2018-10-28 12:26 GMT
சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேள் போன்றவர் மோடி. கையாலும் அகற்ற முடியாது, செருப்பாலும் அடிக்க முடியாது என சசி தரூர் வெளியிட்ட கருத்துக்கு பா.ஜ.க. கண்டனம் தெரிவித்துள்ளது. #BJPslamsShashiTharoor #comparingModiwithscorpion #scorpionsittingonShivling
புதுடெல்லி:

பெங்களூரு நகரில் நடைபெற்ற இலக்கிய விழாவில் மத்திய முன்னாள் மந்திரி சசி தரூர் பங்கேற்று உரையாற்றினார்.

ஒரு ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் பிரதமர் நரேந்திர மோடியைப் பற்றி பத்திரிகையாளரிடம் குறிப்பிடுகையில், ‘மோடி சிவலிங்கத்தின் மீது அமர்ந்திருக்கும் தேளைப் போன்றவர். அந்த தேளை கையாலும் எடுத்தெறிய முடியாது, செருப்பால் அடித்து கொல்லவும் முடியாது’ என உதாரணம் கூறியதாக சசி தரூர் பேசினார்.

அவரது இந்த சர்ச்சைப் பேச்சை சில ஊடகங்கள் வீடியோ வடிவில் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. இந்நிலையில், சசி தரூரின் கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடுமையான எதிர்ப்பையும், கண்டனத்தையும் வெளிப்படுத்தியுள்ளனர்.

இதுதொடர்பாக, செய்தியாளர்களுக்கு இன்று பேட்டியளித்த மத்திய சட்டம், நீதித்துறை மற்றும் தகவல் தொழில்நுட்பத்துறை மந்திரி ரவிசங்கர் பிரசாத், ‘சிவபக்தர் என்று தன்னை கூறிக்கொள்ளும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சசி தரூரின் கருத்துக்கு பதில் அளிப்பதுடன், இதற்காக மன்னிப்பும் கேட்க வேண்டும்’ என வலியுறுத்தியுள்ளார். #BJPslamsShashiTharoor #comparingModiwithscorpion #scorpionsittingonShivling
Tags:    

Similar News