செய்திகள்

தினமும் ரூ.10 ஆயிரம்தான் ரொக்க பரிமாற்றம் செய்ய வேண்டும்- வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் கடிவாளம்

Published On 2018-11-26 05:53 GMT   |   Update On 2018-11-26 05:53 GMT
பிரசாரத்துக்கு தினமும் ரூ.10 ஆயிரம்தான் ரொக்க பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று வேட்பாளர்களுக்கு தேர்தல் கமிஷன் புதிய கடிவாளம் போட்டுள்ளது. #ElectionCommission
புதுடெல்லி:

இந்தியாவில் தேர்தலின்போது பணப்புழக்கம் அதிகரித்து வருகிறது. ஓட்டுக்காக பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொடுத்து வாக்காளர்களை அரசியல் கட்சிகள் கவர முயற்சிப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.

தேர்தலை நேர்மையாகவும், சுதந்திரமாகவும், வெளிப்படையாகவும் நடத்துவதற்கு பணப்புழக்கத்தை கட்டுப்படுத்துவதில் தேர்தல் கமிஷன் கூடுதல் கவனமும், ஆர்வமும் செலுத்தி வருகிறது.

தேர்தல் பிரசாரத்துக்கு வேட்பாளர்கள் தினமும் ரூ.20 ஆயிரம் அளவுக்குத்தான் ரொக்க பரிமாற்றம் செய்ய வேண்டும் என்று 2011-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் தேர்தல் கமிஷன் அறிவித்து நடைமுறைப்படுத்தியது.

இப்போது இதில் புதிய கடிவாளத்தை தேர்தல் கமிஷன் போட்டுள்ளது. ரொக்க பரிமாற்றத்தின் அளவை பாதி ஆக்கி உள்ளது. 2017-ம் ஆண்டு, வருமான வரி சட்டம் பிரிவு 40 ஏ(3)-ல் செய்யப்பட்ட திருத்தத்தை கருத்தில் கொண்டு, வேட்பாளர்களின் தினசரி பண பரிமாற்றத்தின் அளவை ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.10 ஆயிரம் ஆக தேர்தல் கமிஷன் குறைத்துள்ளது.

இது கடந்த 12-ந் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு உள்ளிட்ட அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் கமிஷன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

மேலும், சத்தீஷ்கார், மிசோரம், தெலுங்கானா, மத்திய பிரதேசம், ராஜஸ்தான் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தலிலும் இது அமல்படுத்தப்பட்டுள்ளது.

தேர்தல் பிரசாரத்தின்போது வேட்பாளர்கள் தினமும் ரூ.10 ஆயிரம் மட்டுமே ரொக்க பரிமாற்றம் செய்ய வேண்டும், அதற்கு கூடுதலாக பரிமாற்றம் செய்ய வேண்டும் என்றால் அதை தேர்தலுக்காக வேட்பாளர்கள் தொடங்குகிற வங்கிக்கணக்கில் மின்னணு முறையில்தான் மேற்கொள்ள வேண்டும் அல்லது காசோலை வழியாக மேற்கொள்ள வேண்டும் என தேர்தல் கமிஷன் கூறி உள்ளது.

எனவே பிரசாரத்தின்போது எந்த வேட்பாளரும் ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக ஒரு நபரிடம் இருந்து அல்லது நிறுவனத்திடம் இருந்து நன்கொடையாகவோ, கடனாகவோ பெற முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. #ElectionCommission
Tags:    

Similar News