செய்திகள்
சித்தூர் அருகே தனியார் பள்ளியில் வீட்டுப்பாடம் செய்யாத மாணவர்கள் நிர்வாணமாக வெயிலில் நிறுத்தப்பட்ட காட்சி.

ஆந்திராவில் மாணவர்களை நிர்வாணமாக வெயிலில் நிற்க வைத்து கொடுமை

Published On 2018-12-28 11:36 GMT   |   Update On 2018-12-28 11:36 GMT
ஆந்திர மாநிலம் சித்தூரில் பள்ளிக்கு தாமதமாக வந்த மாணவர்கள் நிர்வாணமாக வெயிலில் நிற்க வைத்த விவகாரத்தில் தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியை கைது செய்தனர்.
திருப்பதி:

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் புங்கனூரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர்.

இந்த பள்ளியின் தலைமை ஆசிரியராக நாகராஜ் நாயுடு என்பவரும் ஆசிரியையாக புவனேஸ்வரியும் உள்ளனர்.

இந்த நிலையில் கடந்த புதன்கிழமை காலை அதே பள்ளியில் 3ம் வகுப்பு படிக்கும் 6 மாணவர்கள் பள்ளிக்கு தாமதமாக வந்து உள்ளனர். மேலும் வீட்டு பாடம் எழுதவில்லை என தெரிகிறது. இதனால் ஆத்திரம் அடைந்து வகுப்பு ஆசிரியை 6 மாணவர்களின் ஆடைகளை கழற்றி பள்ளி திடலில் நிர்வாணமாக வெயிலில் சுமார் 2 மணி நேரம் நிற்க வைத்தார்.

அந்த வழியாக சென்றவர்கள் மாணவர்களை செல்போனில் படம் பிடித்து வாட்ஸ்அப், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். இந்த செய்தி ஆந்திரா முழுவதும் வைரலாக பரவியது.

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட கல்வி அதிகாரி பாண்டு ரெங்கசாமி அந்த பள்ளியில் விசாரணை நடத்த மண்டல அலுவலருக்கு உத்தரவிட்டார்.

இதையடுத்து மண்டல அலுவலர் லீலா ராணி அந்த பள்ளிக்கு சென்று சம்பவம் நடந்தது உண்மை என மாவட்ட கல்வி அதிகாரிக்கும் கலெக்டர் பிரதிம்னாவுக்கு அறிக்கை அனுப்பினர். இதையடுத்து கலெக்டரின் உத்தரவின் பேரில் புங்கனூர் சென்ற போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் பள்ளி தலைமை ஆசிரியர் நாகராஜ் நாயுடு ஆசிரியை புவனேஸ்வரியை கைது செய்து விசாரணை நடத்தினர்.

மேலும் பள்ளி முன்பு மாணவர்களின் உறவினர்கள் மற்றும் பாஜக-வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் இந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய கலெக்டர் பிரதிம்னா உத்தரவிட்டுள்ளார்.
Tags:    

Similar News