செய்திகள்
பாராளுமன்ற தேர்தல் - மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் 14 மாநிலங்களில் போட்டி
எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 14 மாநிலங்களில் போட்டியிடுவோம் என மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது. #TMC #LokSabhaelections #DerekObrien
கொல்கத்தா:
மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரியும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி தலைமையில் கொல்கத்தாவில் கடந்த 19-ம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், நாடு முழுவதிலும் இருந்து 22 முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்று பேசினர்.
இந்த கூட்டத்தால் பா.ஜ.க. முகாமில் சற்று சலசலப்பு ஏற்பட்டுள்ளதாக வடநாட்டு ஊடகங்கள் விமர்சித்திருந்தன.
இந்நிலையில், எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் 14 மாநிலங்களில் போட்டியிடுவோம் என மம்தா தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இன்று அறிவித்துள்ளது.
கொல்கத்தா நகரில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அக்கட்சியின் மூத்த தலைவர் டெரெக் ஓ பிரயன், ‘கடந்த 19-ம் தேதி மம்தா தலைமையில் நாட்டில் உள்ள எதிர்க்கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் திரண்ட நாள் இந்திய அரசியல் வரலாற்றில் மறக்க முடியாத நாளாக அமையும்’ என்று குறிப்பிட்டார்.
மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளிலும் அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். ஒடிசா உள்பட 14 மாநிலங்களிலும் இந்த தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்துவோம் என்றும் அவர் தெரிவித்தார். #TMC #LokSabhaelections #DerekObrien