செய்திகள்

சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார்: பாஜகவுக்கு குமாரசாமி பதிலடி

Published On 2019-02-08 01:57 GMT   |   Update On 2019-02-08 01:57 GMT
சட்டசபையில் பெரும்பான்மையை நிரூபிக்க தயார் என்று பா.ஜனதாவுக்கு முதல்-மந்திரி குமாரசாமி பதிலடி கொடுத்துள்ளார். #Kumaraswamy #BJP
பெங்களூரு :

கர்நாடக சட்டசபை பட்ஜெட் கூட்டம் நேற்று முன்தினம் தொடங்கி நடந்து வருகிறது. நேற்று நடந்த 2-வது நாள் கூட்டத்தில், கூட்டணி அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்றும், எனவே முதல்-மந்திரி குமாரசாமி பதவி விலக வேண்டும் என்று கோரி பா.ஜனதா உறுப்பினர்கள் தர்ணாவில் ஈடுபட்டனர்.

இதனால் கடும் அமளி ஏற்பட்டு சட்டசபையை நாள் முழுவதும் சபாநாயகர் ரமேஷ்குமார் ஒத்தி வைத்தார்.

இதுகுறித்து முதல்-மந்திரி குமாரசாமி பெங்களூரு விதான சவுதாவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-



பா.ஜனதாவினர் சட்டசபை நடவடிக்கைகளுக்கு குறுக்கீடு செய்யும் வகையில் தர்ணா போராட்டம் நடத்துகிறார்கள். சபை சுமுகமாக நடைபெற ஒத்துழைத்தால், அரசின் பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க நான் தயாராக இருக்கிறேன்.

அரசுக்கு பெரும்பான்மை இல்லை என்று கூறி தர்ணா நடத்துகிறார்கள். தர்ணா நடத்துவதற்கு பதிலாக நம்பிக்கையில்லா தீர்மானத்தை பா.ஜனதா கொண்டுவர வேண்டும். எந்த நோக்கத்திற்காக அவர்கள் தர்ணா நடத்துகிறார்கள் என்பது தெரியவில்லை.

நாடாளுமன்றத்தில் நிதித்துறை மந்திரி பட்ஜெட்டை தாக்கல் செய்யும்போது, அதன் பிரதியை உறுப்பினர்களுக்கு வழங்குவது இல்லை. பட்ஜெட் முழுமையாக தாக்கல் செய்யப்பட்ட பிறகே புத்தகம் வழங்கப்படுகிறது. அந்த நடைமுறையை தான் இப்போது நான் இங்கே பின்பற்ற முடிவு செய்துள்ளேன்.

இவ்வாறு குமாரசாமி கூறினார். #Kumaraswamy #BJP
Tags:    

Similar News