செய்திகள்

அருணாச்சலப்பிரதேசத்தில் ரூ.4000 கோடி திட்டங்கள் - பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்

Published On 2019-02-09 08:52 GMT   |   Update On 2019-02-09 08:52 GMT
அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, உரையாற்றினார். #PMModi #PMModilaysfoundation #ModiinArunachalPradesh
இட்டாநகர்:

அரசுமுறை பயணமாக அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்துக்கு இன்று வந்த பிரதமர் நரேந்திர மோடி, தலைநகர் இட்டாநகர் பகுதியில் உள்ள ஹோல்லோங்கி என்ற இடத்தில் அமையவுள்ள புதிய பசுமை விமான நிலையத்துக்கு அடிக்கல் நாட்டினார்.

110 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்ட பாரே புனல் மின்சார நிலையம் உள்பட சுமார் 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு புதிய திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டிய அவர் சுமார் 125 கோடி ரூபாய் செலவில் விரிவாக்கம் செய்து புதுப்பிக்கப்பட்ட தேஜு விமான நிலையத்தையும் காணொலி மூலம் திறந்து வைத்தார்.



இந்த விமான நிலையம் செயல்பாட்டுக்கு வருவதால் இங்கிருந்து மலர்கள் மற்றும் பழவகைகள் சில மணி நேரத்துக்குள் அண்டை மாநிலமான அசாம் தலைநகர் கவுகாத்தி உள்ளிட்ட பிறபகுதிகளுக்கு விமானம் மூலம் சென்றடையும் என  குறிப்பிட்ட மோடி, ஆயுஷ்மன் பாரத் திட்டத்தின்கீழ் 50 சுகாதார நிலையங்களையும் தொடங்கி வைத்தார்.

அருணாச்சலப்பிரதேசம் மாநிலத்தை இந்தியாவின் பெருமிதம் என்று குறிப்பிட்ட மோடி, இம்மாநிலத்தில் நெடுஞ்சாலைகள், ரெயில்வே பாதைகள், விமான வழித்தடங்கள், மின்சார உற்பத்தி போன்ற திட்டங்களுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருவதாகவும் தெரிவித்தார்.

இங்குள்ள மக்கள் ஒருவரையொருவர் சந்திக்கும்போது ‘ஜெய் ஹிந்த்’ என்று வாழ்த்து தெரிவித்துக் கொள்வதை வழக்கமாக வைத்திருப்பதை அறிந்து நான் உண்மையிலேயே மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன். இத்தகைய நாட்டுப்பற்றின் அடையாளம்தான் நமக்கு தேவையான மனவலிமையை தருகிறது.

நாட்டின் பிரதமராக நான் பதவியேற்ற பின்னர் கடந்த 55 மாதங்களில் பலமுறை இங்கு வந்திருக்கிறேன். இன்று 4 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி வைத்திருக்கிறேன். சுமார் 13 ஆயிரம் கோடி ரூபாய் அளவிலான திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

இதுவரை இம்மாநிலத்துக்கு 44 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகை முன்னர் மத்தியில் ஆட்சி செய்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஒதுக்கிய தொகையைவிட இருமடங்கு அதிகமாகும் என்பதை சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

சவுபாக்யா திட்டத்தின்கீழ் இம்மாநிலத்தில் உள்ள அனைத்து இல்லங்களுக்கு மின்சார இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்காக உங்கள் முதல் மந்திரிக்கு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். அருணாச்சலப்பிரதேசம் இன்று செய்துள்ள இந்த சாதனை விரைவில் இந்தியா முழுவதும் நடைமுறைக்கு வந்துவிடும் எனவும் மோடி கூறினார். #PMModi #PMModilaysfoundation #ModiinArunachalPradesh
Tags:    

Similar News