செய்திகள்
குழந்தையை பெண் ஒருவர் கடத்திக்கொண்டு செல்லும் காட்சி

திருப்பதியில் தமிழக தம்பதியின் 3 மாத ஆண் குழந்தை கடத்தல்

Published On 2019-03-18 03:36 GMT   |   Update On 2019-03-18 03:36 GMT
திருப்பதி கோவில் வளாகத்தில் தமிழக தம்பதியின் 3 மாத ஆண் குழந்தையை பெண் ஒருவர் கடத்திச் சென்றதையடுத்து, அந்த பெண்ணை பிடிப்பதற்கு போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். #Tirupati #BabyKidnapping
திருப்பதி:

விழுப்புரத்தை சேர்ந்தவர் மகாவீரர். இவருடைய மனைவி கவுசல்யா. இவர்களுக்கு வீரா என்ற 3 மாத ஆண் குழந்தை உள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்துவதற்காக நேற்று முன்தினம் மகாவீரர் தம்பதியர் குழந்தையுடன் திருப்பதி திருமலைக்கு சென்றனர்.

அவர்கள் தங்குவதற்கு அறை கிடைக்காததால், பழைய அன்னதானக்கூடம் அருகில் உள்ள எஸ்.வி.காம்ப்ளக்ஸ் 2-வது மாடியில் ஒரு கடையின் வெளியே குழந்தையுடன் படுத்து தூங்கினர். நேற்று அதிகாலை 5.30 மணியளவில் எழுந்தபோது, கவுசல்யா தனது அருகில் தூங்கிய குழந்தை வீராவை காணாததால் அதிர்ச்சி அடைந்தார். பதற்றம் அடைந்த அவர், அப்பகுதியில் குழந்தையை தேடிப்பார்த்தும் காணவில்லை.

இதுகுறித்து திருமலை போலீசில் மகாவீரர் புகார் செய்தார். தகவல் அறிந்ததும், திருப்பதி தேவஸ்தான பாதுகாப்பு மற்றும் பறக்கும் படை அதிகாரிகள் திருமலை முழுவதும் தேடிப்பார்த்தனர்.

அங்கு பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்ததில் 25 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் சுடிதார் அணிந்து தலையில் துணியை கட்டிக் கொண்டு குழந்தையை தூக்கிச்செல்லும் காட்சி பதிவாகி இருப்பது தெரிந்தது. இதையடுத்து அந்த பெண்ணை தேடும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த டிசம்பர் மாதம் மகாராஷ்டிரத்தை சேர்ந்த தம்பதியிடம் 18 மாத ஆண் குழந்தை கடத்தப்பட்டது. சில நாட்கள் முன்பு குழந்தையை கடத்திய நபரை போலீசார் மகாராஷ்டித்தில் கைது செய்து குழந்தையை மீட்டனர். 2017-ம் ஆண்டு 2 கடத்தல் சம்பவங்கள் நடந்தது. பின்னர் கடத்தல்காரர்கள் தெலுங்கானா மற்றும் தமிழ்நாட்டில் கைது செய்யப்பட்டனர்.

திருமலையில் குழந்தை கடத்தல் சம்பவம் அடிக்கடி நடந்துவருவது பக்தர்கள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. குழந்தை கடத்தல் சம்பவத்தை தடுக்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். #Tirupati #BabyKidnapping

Tags:    

Similar News