செய்திகள் (Tamil News)

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரசுக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது- மோடி

Published On 2019-04-27 03:53 GMT   |   Update On 2019-04-27 03:53 GMT
பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு 50 தொகுதிகள் கூட கிடைக்காது என நரேந்திர மோடி பேசினார். #Loksabhaelections2019 #PMModi #BJP
மும்பை:

மும்பையில் உள்ள 6 பாராளுமன்ற தொகுதிகளில் வருகிற 29-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில் நேற்று மும்பை வந்த பிரதமர் நரேந்திர மோடி, பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் மைதானத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பா.ஜனதா மற்றும் கூட்டணி கட்சியான சிவசேனா வேட்பாளர்களுக்காக பிரசாரம் செய்தார்.

அவருடன் சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே பங்கேற்றார். மேலும் முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், மத்திய மந்திரி ராம்தாஸ் அத்வாலே ஆகியோர் கலந்துகொண்டனர்.

பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:-

இந்த தேர்தல் அரசை நியமிக்கப்போகும் தேர்தல் இல்லை. ஏழை, எளிய மக்களின் வாழ்க்கையை மாற்றப்போகும் தேர்தல்.

எனவே உங்கள் வாக்குகளை வீணாக்காதீர்கள். ஆட்சி அதிகாரத்திற்கு வர இருக்கும் கட்சிக்கு வாக்குகளை பதிவுசெய்து உங்கள் வாக்குகளுக்கு வலுசேர்த்துக்கொள்ளுங்கள். தற்போது இருக்கும் ஒரே கேள்வி என்ன என்றால் பா.ஜனதா தனது முந்தைய 2014-ம் ஆண்டு வெற்றி எண்ணிக்கையை முறியடிக்குமா என்பது தான். காங்கிரஸ் கட்சிக்கு கடந்த தடவை கிடைத்த தொகுதிகள் கூட கிடைக்குமா என்பது சந்தேகம் தான். அவர்கள் 50 இடங்களை கூட பெறமாட்டார்கள்.

காங்கிரஸ் கட்சியானது நமது நாட்டில் பயங்கரவாத தாக்குதல் நடந்தால் உடனே முதல்-மந்திரியையும், உள்துறை மந்திரியையும் மாற்றிக்கொண்டு இருந்தது. ஆனால் இந்த கலாசாரத்தை நாங்கள் மாற்றிவிட்டோம்.

முந்தைய காங்கிரஸ் அரசு நடுத்தர மக்களை தங்களின் சுயநலத்திற்காகவும், பேராசைக்காகவும் பயன்படுத்திக்கொண்டது. ஆனால் எங்கள் தலைமையிலான அரசாங்கம் நடுத்தர மக்களால் கிடைத்த நன்மைகளை கோடிட்டு காட்டியது. தொலைபேசி கட்டணம் நடுத்தர மக்களுக்கு மிகப்பெரிய சுமையாக இருந்தது. எங்கள் அரசின் முயற்சியால் தொலைத்தொடர்பு கிட்டத்தட்ட இலவசமாக கிடைக்கிறது. மேலும் இணைய சேவையும் உலகிலேயே மிக மலிவாக கிடைக்கிறது.

நாங்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ரெயில் சேவையை மேம்படுத்துவதே எங்களின் முதல் குறிக்கோளாக இருக்கும். புல்லட் ரெயில் திட்டம், மெட்ரோ ரெயில் திட்டம் ஆகியவற்றில் கவனம் செலுத்தப்படும்.

இதன்காரணமாக அடுத்த சில ஆண்டுகளில் 275 கிலோ மீட்டருக்கு மெட்ரோ ரெயில் பாதைகள் விரிவுபடுத்தப்படும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார். #Loksabhaelections2019 #PMModi #BJP
Tags:    

Similar News