செய்திகள்

குழந்தைக்கு மோடியின் பெயரை சூட்டிய இஸ்லாமியர் - மகனை காண முடியாமல் துபாயில் தவிப்பு

Published On 2019-05-27 12:19 GMT   |   Update On 2019-05-27 13:27 GMT
பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையின்போது உத்தரப்பிரதேசத்தில் பிறந்த குழந்தைக்கு நரேந்திர மோடி என்று பெயர் சூட்டிய இஸ்லாமியர் தனது மகனை காண முடியாமல் துபாயில் தவித்து வருகிறார்.
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள கோன்டா மாவட்டத்தை சேர்ந்தவர் முஸ்தாக் அஹமத்(29). கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன்னர் வேலைதேடி துபாய்க்கு சென்ற முஸ்தாக் அஹமத் துபாயில் இருந்து சுமார் 130 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஹட்டா என்ற இடத்தில் தற்போது பணியாற்றி வருகிறார்.

முஸ்தாக் அஹமதின் மனைவி மைனாஸ் பேகம். இந்த தம்பதியருக்கு மன்ட்டாஸா(7), பாத்திமா(3) என்ற இரு மகள்கள் உள்ளனர். இந்நிலையில், கடந்த 23-ம் தேதி இந்தியா முழுவதும் பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று கொண்டிருந்தபோது துபாயில் உள்ள கணவருக்கு போன் செய்த மைனாஸ் பேகம், தங்களது குடும்பத்தில் புதிய வரவாக ஆண் குழந்தை பிறந்திருக்கும் இனிப்பான செய்தியை முஸ்தாக் அஹமதுக்கு மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.

அந்த நல்ல செய்தி அவரது காதில் தேனைப் பாய்ச்ச, இன்னொரு நல்ல செய்தியை அறிந்துகொள்ளும் ஆவலில் நமது நாட்டின் பாராளுமன்ற தேர்தலில் யார் வெற்றி பெற்றார்கள்? என்று மனைவியை விசாரித்தார் முஸ்தாக் அஹமத்.

பல தொகுதிகளில் பாஜக வேட்பாளர்கள் வெற்றிபெற்று மோடி மீண்டும் பிரதமராக பதவி ஏற்கப்போகும் மேலும் ஒரு நற்செய்தியை மைனாஸ் பேகம் தெரிவித்தார். நாட்டிலும் மோடி வந்து விட்டார். நம் வீட்டிலும் மோடி வந்து விட்டார் என்று ஆனந்தமிகுதியில் முஸ்தாக் அஹமத் கூறினார்.

பிறந்த ஆண் குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம்? என்று கணவனும் மனைவியும் ஆலோசித்தபோது தனது மகனுக்கு மோடியின் நினைவாக நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்று பெயர்சூட்ட விரும்புவதாக மைனாஸ் பேகம் குறிப்பிட்டார்.



இதை முதலில் முஸ்தாக் அஹமத் ஏற்றுக்கொள்ள மறுத்தாலும் இதில் மனைவி பிடிவாதமாக இருப்பதால் இறுதியாக அவர் சம்மதித்தார். ஆனால், இந்த தம்பதியினரின் முடிவுக்கு இருவரின் குடும்பத்தாரும் உற்றார், உறவினர்களும் கடுமையான எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஆனால், இந்த எதிர்ப்பை எல்லாம் பொருட்படுத்தாமல் தங்களது அன்பு மகனுக்கு நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்று பெயர்சூட்டிய பின்னர் மைனாஸ் பேகத்தின் சார்பில் அவரது குடும்பத்தார் கோன்டா மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் அவனுக்கு பெயர் வைக்கப்பட்ட விபரத்தை பதிவு செய்தனர்.

மோடி அரசால் நடைமுறைக்கு வந்த முத்தலாக முறை ஒழிப்பு சட்டம், இலவச எரிவாயு இணைப்பு திட்டம், கழிப்பறைகள் கட்டுவதற்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் மற்றும் பல்வேறு திட்டங்களால் ஈர்க்கப்பட்டு தனது வாரிசுக்கு இந்த பெயரை சூட்டியுள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் மைனாஸ் பேகம் குறிப்பிட்டுள்ளனர்.



இந்நிலையில், நரேந்திர தாமோதரதாஸ் மோடி என்று பெயரிடப்பட்ட தனது மகனை பார்ப்பதற்கு அக்கம்பக்கத்து ஊர்களில் இருந்தெல்லாம் பலர் வந்து செல்வதாக கேள்விப்பட்ட முஸ்தாக் அஹமத், ’உடனடியாக தாய்நாட்டுக்கு செல்ல முடியவில்லையே’ என்ற ஏக்கத்துடன்  துபாயில் சோகத்துடன் நாட்களை நகர்த்தி வருகிறார்.

’விமான டிக்கெட் கட்டணம் மற்றும் இதர செலவினங்களுக்கான பணத்தை சேர்ப்பதற்காக நான் இன்னும் கொஞ்சம் நாள் வேலை செய்ய வேண்டியுள்ளது. என் மகனை பார்க்கச் செல்லும் அந்த நல்ல நாளுக்காக காத்திருக்கிறேன்.

கடந்த ஐந்தாண்டுகளாக ஏராளமான திட்டங்களை நிறைவேற்றிய நமது நாட்டின் பிரதமரைப்போல் என் மகனும் நல்ல காரியங்களை செய்து மக்களின் நன்மதிப்பை பெறுவான். சிறுவனாக இருக்கும்போது அவனை மற்றவர்கள் எல்லாம் ‘மோடி,மோடி’ என்று அழைத்து கேலி செய்யலாம்.

ஆனால், அவன் வளர்ந்து ஆளான பின்னர் அவனிடம் வாலாட்ட யாருக்கும் துணிச்சல் வராது. ஏனென்றால், அவன் நரேந்திர மோடி. இந்தியா முழுவதற்கும் ஒரு மோடி. ஆனால், என்னிடம் இரண்டு மோடிகள் இருக்கிறார்கள்.

என் மகனைப் பற்றி கேள்விப்பட்டு பிரதமர் மோடி என்றாவது ஒருநாள் எங்கள் கிராமத்துக்கு வந்து அவனை பார்த்து ஆசீர்வதிப்பார் என்று நம்புகிறேன். அவர் அவ்வாறு செய்தால் எனது மகனுக்கும் எங்கள் குடும்பத்துக்கும் கிடைத்த மிகப்பெரிய கவுரவமாக அமைந்துவிடும்’ என்று தனது ஆவலையும்  வெளிப்படையாக தெரிவித்தார்.
Tags:    

Similar News