செய்திகள்

மத்திய மந்திரியாக அமித் ஷா பதவியேற்றார்- ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமனுக்கு மந்திரிசபையில் மீண்டும் இடம்

Published On 2019-05-30 13:55 GMT   |   Update On 2019-05-30 13:55 GMT
நாட்டின் பிரதமராக இரண்டாவது முறையாக மோடி இன்று பதவியேற்றார். அவரது மந்திரிசபையில் இடம்பெற்றுள்ள அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட மந்திரிகளும் பதவியேற்றனர்.
புதுடெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 353 இடங்களில் மகத்தான வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடித்தது. பா.ஜனதா மட்டும் 303 தொகுதிகளை கைப்பற்றி தனிப் பெரும்பான்மை பலம் பெற்றுள்ளது. புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட பா.ஜனதா எம்.பி.க்களின் கூட்டத்தில் பாராளுமன்ற கட்சி தலைவராக (பிரதமர்) நரேந்திர மோடி மீண்டும் தேர்ந்து எடுக்கப்பட்டார். 

இதையடுத்து அவர் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தை சந்தித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அவரும் ஆட்சி அமைக்க மோடிக்கு அழைப்பு விடுத்தார். அதன்படி பிரதமர் மோடி இரண்டாவது முறையாக இன்று பிரதமராக பதவியேற்றுக்கொண்டார். 

ஜனாதிபதி மாளிகையில் இன்று இரவு நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவி பிரமாணமும், ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்து, வாழ்த்து தெரிவித்தார். பின்னர் மோடியின் புதிய மந்திரிசபையில் இடம்பெற்ற மந்திரிகள் பதவியேற்றனர்.

முதலில் ராஜ்நாத் சிங் பதவியேற்றார். அவரைத் தொடர்ந்து பாஜக தலைவர் அமித் ஷா பதவியேற்றார். குஜராத் மாநிலம் காந்தி நகர் தொகுதியில் வெற்றி பெற்ற அமித் ஷாவுக்கு நிதித்துறை ஒதுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அமித் ஷாவைத் தொடர்ந்து, நிதின் கட்காரி, சதானந்த கவுடா, நிர்மலா சீதாராமன், ராம்விலாஸ் பஸ்வான் உள்ளிட்ட பிற மந்திரிகளும் பதவியேற்றனர்.
Tags:    

Similar News