செய்திகள் (Tamil News)
கோப்புபடம்

கொரோனா ஊரடங்கு காலத்தில் சம்பளம் வழங்காததால் ஓட்டல் உரிமையாளர் வெட்டிக்கொலை - தொழிலாளி வெறிச்செயல்

Published On 2021-06-30 11:09 GMT   |   Update On 2021-06-30 11:09 GMT
திருப்பதி அருகே கொரோனா ஊரடங்கு காலத்தில் சம்பளம் வழங்காத ஓட்டல் உரிமையாளரை தொழிலாளி வெட்டிக்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

திருப்பதி:

திருப்பதியை சேர்ந்தவர் வித்யாசாகர். (வயது52). காளஹஸ்தியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரலு (53). இவர் ஹைதராபாத்தில் ஓட்டல் நடத்தி வந்தார்.

இவரது ஓட்டலில் வித்யாசாகர் தங்கியிருந்து வேலை செய்து வந்தார்.கொரோனா ஊரடங்கால் வியாபாரம் சுமாராக இருந்ததால் கடந்த 6 மாதமாக வித்யாசாகருக்கு வெங்கடேஸ்வரலு சம்பளம் வழங்கவில்லை என கூறப்படுகிறது.

வித்யாசாகர் குடும்பத்தினர் அவருக்கு போன் செய்து வீட்டு செலவுக்கு பணம் அனுப்புமாறு கூறியுள்ளனர். சம்பள பணத்தை வழங்குமாறு வித்யாசாகர் வெங்கடேஸ்வரலுவிடம் கேட்டு வந்தார்.

ஆனால் அவர் சம்பளத்தை வழங்காமல் நாள் கடத்தி வந்தார். இந்த நிலையில் வெங்கடேஸ்வரலு காளஹஸ்திக்கு வந்தார். வித்யாசாகரும் திருப்பதிக்கு வந்துவிட்டார். இதையடுத்து வித்யாசாகர் காளஹஸ்திக்கு சென்று வெங்கடேஸ்வரலுவிடம் சம்பளம் கேட்டுள்ளார்.

அப்போது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த வித்யாசாகர் வெங்கடேஸ்வரலுவை கத்தியால் வெட்டி கொலை செய்தார். பின்னர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார்.

இதுகுறித்து காளஹஸ்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து வித்யாசாகரை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Similar News