செய்திகள் (Tamil News)
ஆதி சங்கரர் சிலையை திறந்து வைத்த பிரதமர் மோடி

கேதார்நாத்தில் ஆதி சங்கரர் சிலையை திறந்து வைத்தார் மோடி

Published On 2021-11-05 04:53 GMT   |   Update On 2021-11-05 07:17 GMT
கேதார்நாத் ஆலயத்தின் ஒரு பகுதியில் ஆதி சங்கரரின் 12 அடி உயர பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அவரது சமாதியும் சீரமைக்கப்பட்டு உள்ளது.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலம் கேதார்நாத்தில் உலக புகழ்பெற்ற கேதார்நாத் சிவாலயம் உள்ளது.

இந்தியாவின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான இங்கு பஞ்ச பாண்டவர்கள் வழிபட்டு பலன் பெற்றதாக புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. தியானத்துக்கும் கேதார்நாத் பகுதி மிக சிறந்ததாக கருதப்படுகிறது.

கங்கையின் கிளை நதிகளில் ஒன்றான மந்தாகினி நதியின் கரையோரம் கேதார்நாத் தலம் அமைந்துள்ளது. கடந்த 2013-ம் ஆண்டு மந்தாகினி ஆற்றில் ஏற்பட்ட மிகப்பெரிய வெள்ளப்பெருக்கால் கேதார்நாத் ஆலயம் மிக கடுமையாக சேதம் அடைந்தது. அங்கிருந்த ஆதி சங்கரரின் சமாதி, சிலை மற்றும் முக்கிய சன்னதிகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டன. இதையடுத்து கேதார்நாத் ஆலயத்தை சீரமைக்க மத்திய, மாநில அரசுகள் சுமார் ரூ.500 கோடியை ஒதுக்கீடு செய்து பணிகள் நடைபெற்று வந்தன. தற்போது அந்த பணிகள் நிறைவு பெற்று உள்ளன.

கேதார்நாத் ஆலயத்தின் ஒரு பகுதியில் ஆதி சங்கரரின் 12 அடி உயர பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அவரது சமாதியும் சீரமைக்கப்பட்டு உள்ளது. இவற்றின் திறப்பு விழாவும், கேதார்நாத் ஆலயத்தின் புதிய 5 வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழாவும் இன்று காலை நடைபெற்றது.



பிரதமர் மோடி விழாவில் கலந்து கொண்டு ஆதி சங்கரரின் சிலையை திறந்து வைத்தார். இதுதவிர 5 புதிய திட்டங்களையும் தொடங்கி வைத்தார்.

மேலும் ஏ.டி.எம். மூலம் சுத்தமான குடிநீர் வழங்குவது உள்பட பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். விழாவில் கலந்து கொள்வதற்காக பிரதமர் மோடி இன்று அதிகாலை டெல்லியில் இருந்து விமானத்தில் டேராடூனுக்கு புறப்பட்டு வந்தார். அவரை உத்தரகாண்ட் கவர்னர் லெப்டினன்ட் ஜெனரல் குர்மித்சிங், முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி மற்றும் அமைச்சர்கள், அதிகாரிகள் வரவேற்றனர்.

பிறகு பிரதமர் மோடி, முதல்-மந்திரி புஷ்கர்சிங் தாமி மற்றும் அதிகாரிகள் கேதார்நாத்துக்கு சென்றனர். 8 மணிக்கு கேதார்நாத் ஆலயத்தில் பிரதமர் மோடி தன் கையால் ஆரத்தி எடுத்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டார். அவர் கேதார்நாத் லிங்கத்துக்கு மகா ருத்ர அபிஷேகமும் செய்தார்.

8.35 மணிக்கு ஆதி சங்கரர் சமாதி மற்றும் சிலைகளை திறந்து வைத்தார். சிலை தனி கூடத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. அங்கு திரைச்சீலையை தன் கையால் அகற்றி ஆதிசங்கரர் சிலையை திறந்து வைத்தார். சீரமைக்கப்பட்ட கேதார்நாத் ஆலயத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று பார்வையிட்டார்.

அதன்பிறகு 9.40 மணிக்கு அங்கு புதிய திட்டங்களுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. ரூ.130 கோடிக்கு கேதார்நாத்தின் உள்கட்டமைப்பு பணிக்கான திட்டங்களை தொடங்கி வைத்தார்.

புதிய திட்டங்கள் தொடக்க விழா நிறைவு பெற்ற பிறகு அங்கு நடந்த கூட்டத்திலும் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது ஆதி சங்கரரின் ஆன்மிக சேவையை பிரதமர் மோடி நினைவு கூர்ந்தார்.


Tags:    

Similar News