செய்திகள்
கன்னியாகுமரி மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி

நான் பிரதமர் ஆனால் பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு - ராகுல்காந்தி

Published On 2021-11-07 09:08 GMT   |   Update On 2021-11-07 09:08 GMT
கன்னியாகுமரி மாணவிகளுடன் கலந்துரையாடிய ராகுல்காந்தி குழந்தைகள் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும், அந்த பணிவு அவர்களுக்கு நல்ல புரிதலை உருவாக்கும் என்று கூறினார்.

புதுடெல்லி:

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தமிழக சட்டசபை தேர்தலுக்கு முன்பாக கன்னியாகுமரி மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தார்.

அப்போது முளகுமூடு ஜோசப் மெட்ரிக் மேல்நிலை பள்ளி மாணவிகளுடன் கலந்து ரையாடினார். மேடையில் ராகுல்காந்தி தண்டால் எடுத்து தனது திறமையை வெளிப்படுத்தினார்.

இந்த வீடியோ காட்சி சமூவலைதளங்களில் வைரலாக பரவியது. அந்த மாணவிகளில் சிலரை ராகுல் காந்தி டெல்லிக்கு வரவழைத்து தனது வீட்டில் தீபாவளி விருந்து வழங்கினார்.

அப்போது அவர்களுடன் கலந்துரையாடினார். இந்த வீடியோ காட்சிகள் சிலவற்றை ராகுல்காந்தி டுவிட்டர் தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ஒரு வீடியோவில் மாணவி ஒருவர், ‘‘நீங்கள் பிரதமரானால் முதலாவதாக என்ன உத்தரவு பிறப்பிப்பீர்கள்?’’ என்று ராகுல்காந்தியிடம் கேட்டார்.

அதற்கு ராகுல்காந்தி, ‘‘பெண்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்குவேன்’’ என்று கூறினார்.

மற்றொரு மாணவி, ‘‘குழந்தைகளுக்கு நீங்கள் என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?’’ என்று கேட்டார். அதற்கு ராகுல்காந்தி, ‘‘குழந்தைகள் பணிவுடன் நடந்து கொள்ள வேண்டும், அந்த பணிவு அவர்களுக்கு நல்ல புரிதலை உருவாக்கும் என்று கூறுவேன்’’ என்றார்.

மேலும் ராகுல்காந்தி கூறும்போது, ‘‘தீபாவளி நிகழ்ச்சி என்பது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. பல்வேறு கலாச்சாரத்தின் சங்கமம்தான் நமது நாட்டின் வலுவான சக்தியாக இருக்கிறது. இதை நாம் எப்போதும் காப்பாற்ற வேண்டும்’’ என்று கூறினார்.

இந்த விருந்தின் இடைவெளி நேரத்தில் பிரியங்காவும் அங்கு வந்தார். அவர் அந்த மாணவிகளுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் தெரிவித்தார்.


பின்னர் ராகுல்காந்தியிடம், ‘‘பிரியங்கா விவசாயிகள் போராட்டத்தில் ஆதரவு தெரிவித்து பங்கேற்றது குறித்து என்ன கூறுகிறீர்கள்?’’ என்று கேட்டதற்கு, ‘‘விவசாயிகளோடு நாங்களும் இருக்கிறோம் என்பதை அவரது பங்கேற்பு காட்டியது’’ என்றார்.

இதையும் படியுங்கள்...சென்னையில் 2015-க்குப்பின் அதி கனமழை: 23 செ.மீட்டர் அளவு கொட்டித் தீர்த்தது

Tags:    

Similar News