செய்திகள்
தற்கொலை

வறுமையால் மூன்று சகோதரிகள் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை

Published On 2021-11-19 08:27 GMT   |   Update On 2021-11-19 08:27 GMT
படுகாயங்களுடன் இறந்துக் கிடந்த சகோதரிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
ஜான்பூர்:

உத்தரப் பிரதேச மாநிலம், ஜான்பூர் மாவட்டம், அஹிரோலி கிராமத்தைச் சேர்ந்த சகோதரிகள் மூன்று பேர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துக் கொண்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஜான்பூர் மாவட்டம் பத்லாபூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுல்தான்பூர் ரெயில் பிரிவில் உள்ள ஃபட்டுபூர் ரயில்வே கிராசிங்கில் நேற்று நள்ளிரவில் ஜன்சாதரன் எக்ஸ்பிரஸ் ரெயில் முன் பாய்ந்து சகோதரிகள் மூன்று பேரும் தற்கொலை செய்துக் கொண்டனர்.

சம்பவம் குறித்து அறிந்து விரைந்த போலீசார், படுகாயங்களுடன் இறந்துக் கிடந்த சகோதரிகளின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து நகர கண்காணிப்பாளர் சஞ்சய் குமார் கூறியதாவது:-

ரெயில் முன் பாய்ந்த சிறுமிகளின் பெயர், ப்ரீத்தி (16), காஜல் (14), ஆர்த்தி (11). இவர்களது தந்தை ராஜேந்திர பிரசாத் கவுதம். இவர் 9 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். சிறுமிகளின் தாய்க்கு கண் பார்வை பறிபோனது. சிறுமிகள் மூன்று பேர் மற்றும் சகோதரர் ஒருவர் கூலி தொழில் செய்து குடும்பத்தை காப்பாற்றி வந்துள்ளனர்.

இந்நிலையில், சிறுமிகள் எடுத்த தற்கொலை முடிவுக்கு வீட்டின் வறுமையே காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.  இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

Similar News