இந்தியா
உக்ரைன் நெருக்கடி குறித்து விவாதித்த இந்தியா-கிரீஸ் வெளியுறவு மந்திரிகள்
மக்கள் அகதிகளாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு வெளியேறுவது, சுதந்திரமாக நடமாடுவதன் முக்கியத்துவம் குறித்து பேசப்பட்டது.
புதுடெல்லி:
கிரீஸ் வெளியுறவு மந்திரி நிகோஸ் டென்டியாஸ் இரண்டு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளா. அவர் டெல்லியில் இன்று வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்தார். அப்போது, உக்ரைன் நெருக்கடி தொடர்பாக இருவரும் விரிவாக விவாதித்தனர். மேலும், ஆப்கானிஸ்தான் நிலவரம், இந்தியா-கிரீஸ் நாடுகளிடையே உள்ள நட்புறவை மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.
மக்கள் அகதிகளாக ஒரு நாட்டில் இருந்து மற்றொரு நாட்டிற்கு வெளியேறுவது, சுதந்திரமாக நடமாடுவதன் முக்கியத்துவம் குறித்தும் பேசப்பட்டது. மேலும் இது குறித்த பிரகடனத்தில் இரு தரப்பிலும் கையெழுத்திட்டனர்.
கப்பல் மற்றும் கடல்சார் துறை, தகவல் தொழில்நுட்பம், விவசாயம், புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற பரஸ்பர நன்மை பயக்கும் துறைகளில், ஒத்துழைப்பை மேலும் அதிகரிக்க, இரு நாடுகளும் இணைந்து செயல்படுவதற்கு ஒப்புக்கொண்டதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சர்வதேச சோலார் கூட்டணியின் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கிரீஸ் கையெழுத்திடப்பட்ட ஆவணத்தை கிரீஸ் மந்திரி ஒப்படைத்ததாகவும் வெளியுறவுத்துறை கூறி உள்ளது.