இந்தியா

புதிய குற்றவியல் சட்டத்தின்கீழ் 5½ லட்சம் வழக்குகள் பதிவு

Published On 2024-09-19 02:35 GMT   |   Update On 2024-09-19 02:35 GMT
  • பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3-வது முறையாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் 100 நாள் சாதனைகள் வெளியிடப்பட்டன.

புதுடெல்லி:

ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட இந்திய தண்டனை சட்டம், குற்றவியல் நடைமுறை சட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவை சமீபகாலம்வரை அமலில் இருந்தன.

அந்த சட்டங்களுக்கு மாற்றாக, பாரதீய நியாய சன்ஹிதா (பாரதீய நீதி சட்டம்), பாரதீய நகரிக் சுரக்ஷா சன்ஹிதா (பாரதீய குடிமக்கள் பாதுகாப்பு சட்டம்), பாரதீய சாக்ஷ்யா ஆக்ட் (பாரதீய சாட்சியங்கள் சட்டம்) ஆகிய புதிய குற்றவியல் சட்டங்களை மத்திய அரசு உருவாக்கியது.

இதுதொடர்பான மசோதாக்கள் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. நிலைக்குழு ஆய்வுக்கு பிறகு இரு அவைகளிலும் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. ஜனாதிபதி ஒப்புதலும் பெறப்பட்டது.

3 சட்டங்களும் கடந்த ஜூலை 1-ந்தேதி நாடு முழுவதும் அமலுக்கு வந்தன. அந்த சட்டங்களை எதிர்த்து சில எதிர்க்கட்சிகளும், வக்கீல்களும் போராட்டம் நடத்தினர்.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையிலான அரசு 3-வது முறையாக பதவியேற்று 100 நாட்கள் நிறைவடைந்துள்ளன. இதையொட்டி, மத்திய உள்துறை அமைச்சகத்தின் 100 நாள் சாதனைகள் வெளியிடப்பட்டன.

அதன்படி, பாரதீய நியாய சன்ஹிதா அமலுக்கு வந்த ஜூலை 1-ந்தேதியில் இருந்து கடந்த 3-ந்தேதிவரை அச்சட்டத்தின்கீழ் நாடு முழுவதும் 5 லட்சத்து 56 ஆயிரம் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், இச்சட்டங்களை சுமுகமாக அமல்படுத்துவதற்காக இ-சாக்ஷ்யா உள்பட பல்வேறு செல்போன் செயலிகள் உருவாக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

இ-சாக்ஷ்யா செயலி, ஆதாரங்களை பதிவு செய்யவும், சேமித்து வைக்கவும் பயன்படுகிறது. அதை 22 மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் ஏற்றுக்கொண்டுள்ளன.

புதிய குற்றவியல் சட்டங்களை படித்து பார்க்க 'என்சிஆர்பி சங்களன்' என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை 5 லட்சத்து 85 ஆயிரம் தடவை அந்த செயலி பதிவிறக்கம் செய்யப்பட்டுள்ளது.

தனிநபர்களுக்கு அளிப்பதற்காக கோர்ட்டில் இருந்து போலீஸ் நிலையங்களுக்கு மின்னணு முறையில் சம்மன் அனுப்ப 'இ-சம்மன்' என்ற செயலி உருவாக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News